நடிகர் நெப்போலியன் இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர். புதுநெல்லு புது நாத்து படம்தான் அவரது முதல் படம். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக வில்லனாக நடித்த அவர் குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பாக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர். இப்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் நெப்போலியன் கூறியதாவது, நான் எஜமான் படம் உருவான காலகட்டத்தில் வளர்ந்து வரும் நடிகராக இருந்தேன். எஜமான் படத்தில் என்னை வில்லனாக நடிக்க வைக்கலாம் என்ற போது, அவர் அந்தளவுக்கு ரசிகர்களிடம் பேமஸ் இல்லையே என்று தயங்கி இருக்கிறார்.
ராதாரவி மாதிரி நல்ல அனுபவம் உள்ளவரை வில்லனா போடலாம். கன்னடத்தில் நடிகர் பிரபாகர் மாதிரி ஆளை போடலாம். நெப்போலியன் சின்ன வயசாக இருக்கிறாரே என்றும் கேட்டிருக்கிறார். அதற்கு படத்தின் இயக்குனர் ஆர்வி உதயகுமார், எம்ஜிஆரை விட எம்என் நம்பியார் வயதில் இளையவர்தான்.
ஆனால் பல படங்களில் அவருக்கு மாமனார் அப்பா போன்ற வயதில் மூத்தவர் கேரக்டர்களில் நம்பியார் நடித்திருக்கிறார். அது பெரிய அளவில் சக்சஸ் ஆகியிருக்கிறது. அதனால் நெப்போலியன் நடித்தால் சரியாக இருக்கும் என்று ரஜினியிடம் பேசி ஓகே வாங்கியிருக்கிறார். அந்த படத்தில் நன்றாக நடித்தேன். வாணவராயன் கேரக்டரில் ரஜினியும் வல்லவராயன் கேரக்டரிலும் நானும் நடித்திருந்தோம்.
அந்த படம் எனக்கு பெரிய பெயர் வாங்கி கொடுத்தது. படத்துக்கு டப்பிங் பேசிய பிறகு ரஜினி என்னை போனில் அழைத்து, நெப்போலியன், ஆரம்பத்தில் நான் கூட யோசித்தேன். ஆனால் அருமையாக நடிச்சிருக்கீங்க. உங்கள் கேரக்டர் சிறப்பாக உள்ளது. பெரிய பேர் வரும் என்று என்னை பாராட்டினார்.
அந்த வாய்ப்பு நீங்கள் கொடுத்தது தான் சார். நீங்கள் இந்த படத்தில் பெயர் வாங்காவிட்டாலும் அடுத்த படத்தில் நடித்து பெயர் வாங்கி விடுவீர்கள். ஆனால் உங்கள் படத்தில் நடித்து நான் பெயர் வாங்கினால் தான் அது பெரிய சந்தோஷம் என்று கூறினேன். அவரும் மிகவும் சந்தோஷப்பட்டார் என்று நடிகர் நெப்போலியன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





