தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமடைந்த அவருக்கு பெண் ரசிகைகள் ஏராளமாக இருக்கின்றனர். தொடர்ந்து பல படங்களில் நடித்துவரும் அவருக்கு அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் படங்களைத் தவிர்த்து பெரிய ஹிட் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் பெரும் வெற்றிக்காக அவர் காத்திருக்கிறார். தமிழில் அவர் நடித்த நோட்டா படமும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
இப்படிப்பட்ட சூழலில் அவர் குஷி படத்தில் நடித்திருக்கிறார். சமந்தா ஹீரோயினாக நடித்திருக்கும் இந்தப் படத்தை சிவ நிர்வாணா இயக்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படமானது உருவாகியிருக்கிறது. செப்டம்பர் ஒன்றாம் தேதி குஷி ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்தின் மூலமாவது பெரும் ஹிட் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் விஜய் தேவரகொண்டா. மேலும் சமந்தா இந்தப் படத்துக்கு பிறகு வேறு எதிலும் நடிக்க கமிட்டாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா மந்தனாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியவர். ஆனால் அதுகுறித்து மௌனம் காத்துவருகிறார். இப்படிப்பட்ட சூழலில் குஷி படத்தின் மியூசிக்கல் கான்செர்ட்டில் சமந்தாவும், விஜய் தேவரகொண்டாவும் நடனம் ஆடினர். இதனைப் பார்த்த ரசிகர்களில் ஒரு தரப்பினர் இருவருக்குமான காதல் என்று பேச ஆரம்பித்துவிட்டனர். ஆனால் அதில் உண்மை எதுவும் இல்லை என்கின்றனர் திரைத்துறையினர்.
இந்நிலையில் குஷி படத்தின் ப்ரோமோஷன் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட விஜய் தேவரகொண்டா செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தொடர்ந்து ஆறு தோல்வி படங்களை கொடுத்தார் ரஜினிகாந்த். ஆனால் அவருக்கு ஜெயிலர் படம் ஒரு கம்பேக்காக அமைந்திருக்கிறது. சிரஞ்சீவிக்கும் 7 படங்கள்வரை தோல்வி படங்கள்தான். ஆனாலும் அவரை தெலுங்கு ரசிகர்களும், திரையுலகும் கொண்டாடும்.ஏனென்றால் அவர்கள் இரண்டு பேரும் சூப்பர் ஸ்டார்கள். வெற்றி, தோல்வி எல்லாம் அவர்களை விஞ்சியது. எப்போதும் போற்றப்பட வேண்டியவர்கள்.
ஜெயிலர் படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. அதற்கான நேரமும் கிடைக்கவில்லை. ஆனால் படம் குறித்து நல்ல விஷயங்களைத்தான் நான் கேள்விப்பட்டுக்கொண்டிருக்கிறேன். இதுவரை உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக செய்திகள் வருகின்றனர். பிரமிப்பாக இருக்கிறது. கண்டிப்பாக நேரம் கிடைத்தவுடன் நான் பார்க்கப்போகும் படங்களில் முதல் படம் ஜெயிலர் படமாகத்தான் இருக்கும்” என்றார்.
ரஜினிகாந்த் 6 படங்கள் ஃப்ளாப் கொடுத்துவிட்டார் என்று விஜய் தேவரகொண்டா சொன்னதை கேட்ட ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பின் உச்சத்துக்கு சென்றிருக்கின்றனர். கபாலி, காலா படம் எல்லாம் மெகா ஹிட்டானதுதான். தமிழ் திரையுலகை பற்றி ஒன்றுமே தெரியாத தேவரகொண்டா ரஜினியைப் பற்றி பேசுவது சிரிப்பாக இருக்கிறது என ட்ரோல் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.





