தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ். இதன் தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி. இவரது மகன்கள் நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஜீவா என்பது ரசிகர்கள் அறிந்த தகவல்தான். நடிகர் விஷால் நடித்துள்ள மகுடம் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இது அவர்களது தயாரிப்பில் உருவான 99வது படமாகும்.
தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி நடிகர் விஜய் நடிப்பில் தனது நிறுவனத்தின் 100வது படத்தை தயாரிக்க விரும்பினார். ஆனால் விஜய் அரசியலுக்கு வந்து முதல்வராகி விட்டதால் ஆர்பி சௌத்ரியின் அந்த ஆசை நிறைவேறவில்லை. மேலும் ஆர்பி செளத்ரி கடந்த மாதம் ராஜஸ்தானில் ஒரு திருமண விழாவில் பங்கேற்று விட்டு திரும்பும்போது சாலை விபத்தில் மறைந்து விட்டார்.
இந்நிலையில் சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் நடிகர் ஜீவா தனது படத்தையே 100வது படமாக தயாரிக்க உள்ளார். தலைவர் தம்பி தலைமையில் படம் 2வது பாகமாக உருவாக உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் சூர்யவம்சம் படத்தில் நடிக்க வாய்ப்பு இருந்ததாக ஒரு முக்கிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய திரைப்பட தயாரிப்பாளர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது, ரஜினி கமல் போன்ற நட்சத்திர நடிகர்களை வைத்து ஒரு படம் கூட இயக்கவில்லை என்றாலும் ஆர்பி சௌத்ரி முன்னணி தயாரிப்பாளராகத்தான் தமிழ் சினிமாவில் இருந்தார். ஒருநாள் நான் ரஜினி வீட்டில் இருந்து கிளம்பி சூப்பர் குட் பிலிம்ஸ் அலுவலகத்திற்கு சென்றேன்.
அப்போது சௌத்ரி சார் என்னிடம், சூர்யவம்சம் என்று ஒரு கதை கேட்டேன். அதில் ரஜினிகாந்த் நடித்தால் சூப்பராக இருக்கும் என்று கூறினார். நான் உடனே இப்போது ரஜினி வீட்டில் இருந்துதான் வருகிறேன். நான் வேண்டுமானால் அவரிடம் சொல்லிப் பார்க்கிறேன் என்று சொன்னேன். அவரும் சரி என்று தான் சொன்னார்.
பிறகு அன்று மதியமே ரஜினி வீட்டுக்கு மீண்டும் நான் சென்றேன். ஆனால் அப்போது அவரை நான் சந்திக்க முடியவில்லை. அவர் ஏதோ வேலையாக வெளியே போய்விட்டார். இதை போனில் சௌத்ரியிடம் சொன்னேன். அவரும் சரி விடுங்கள். ரஜினி நடித்தாலும் இந்த படம் ஹிட் தான். சரத்குமார் நடிச்சாலும் இந்த படம் ஹிட் தான் என்று கூறினார் என்று அந்த நேர்காணலில் பேசிய போது திருப்பூர் சுப்ரமணியம் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





