டில்லியில் நேற்று முன்தினம் 72வது இந்திய தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில் நடிகர் தனுஷ் நடித்த ராயன் கேப்டன் மில்லர் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழில் கடந்த 2024ம் ஆண்டில் வெளியான பல சிறந்த படங்கள் தேசிய விருது பட்டியலில் இடம்பெறவில்லை.
குறிப்பாக லப்பர் பந்து தங்கலான் ஆடுஜீவிதம் குரங்கு பெடல் திரு மாணிக்கம் டிமான்டி காலனி 2 மகாராஜா வாழை என பல முக்கிய படங்கள் இந்த விருது பட்டியலில் தேர்வு செய்யப்படவில்லை. தங்கலான் படத்தில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சீயான் விக்ரம் சிறந்த நடிகராக தேர்வு பெறவில்லை. அதேபோல் அமரன் படத்தில் சிறந்த நடிப்பை தந்த சாய்பல்லவிக்கும் விருது அறிவிக்கப்படவில்லை.
மேலும் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான ஒரு விருதை மட்டுமே பெற்றுள்ளது. இப்படி எதிர்பார்க்கப்பட்ட படங்கள் எதுவும் தேசிய விருது பட்டியலில் இடம்பெறாதது தமிழ் சினிமா துறையினருக்கும் குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் படம் முழுவதும் ரத்த வாடை வீசும் கேப்டன் மில்லர் ராயன் போன்ற தனுஷ் படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு இருப்பது பலரையும் எரிச்சல்படுத்தியுள்ளது. அத்துடன் மலையாள நடிகர் பிருத்விராஜ் நடித்த ஆடு ஜீவிதம் போன்ற அற்புதமான படைப்புகள் தேசிய விருது பட்டியலில் இடம்பெறாதது ரசிகர்களுக்கு கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இது தற்போது இணையத்தில் கடும் விமர்சனமாக மாறியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் மற்றும் நடிகர் மிஷ்கின் கூறியதாவது, ஒரு நல்ல திரைப்படத்திற்கு விருது தேவை கிடையாது. விருது என்பதே ஒரு ஊக்கம் தான். தங்கலானுக்கு கிடைக்கவில்லை, வாழைக்கு கிடைக்கவில்லை என்றெல்லாம் நாம் குறை சொல்லக்கூடாது. மாரி செல்வராஜ் பா.ரஞ்சித் எல்லாம் விருதுகளுக்காக படம் எடுப்பவர்கள் கிடையாது.
விருதுகள் கிடைக்கும் போது சந்தோஷப்படுவோம். நமக்கு கிடைக்கவில்லை என்றாலும் பக்கத்தில் இருக்கும் நமது சகோதரனுக்கு தானே கிடைக்கிறது? நான் என்னுடைய எந்த படத்தையும் விருதுகளுக்காக அனுப்பியதே கிடையாது. இனியும் அனுப்ப மாட்டேன். மக்கள் நமது படத்தை டிக்கெட் வாங்கி பார்த்து வெற்றி படமாக ஆக்கிவிட்டார்கள் என்றால் அதைவிட பெரிய விருது என்ன இருக்கிறது என்று இயக்குனர் மிஷ்கின் கூறியிருக்கிறார்.





