இலக்கிய உலகில் மிகப்பெரிய ஆளுமையாக வலம் வருபவர் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன். துணையெழுத்து சிறிது வெளிச்சம் சஞ்சாரம் நிமித்தம் உப பாண்டவம் கடவுளின் நாக்கு என ஏராளமான நூல்களை எழுதியிருக்கிறார். சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர். ரஜினிகாந்த் நடித்த பாபா விஷால் நடித்த சண்டக்கோழி உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். இவரது கதைகள் பல திரைப்படமாக உருவாகி இருக்கின்றன.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் கூறியதாவது, ரஜினியும் நானும் நல்ல நண்பர்களாக ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகிறோம். திரையுலகின் உச்ச நட்சத்திரம் என்ற நிலையில் ஒரு எழுத்தாளராக மட்டுமே அவருடன் எந்த எதிர்பார்ப்பும் இன்றி பழகி வருகிறேன். அவருக்கு எந்த நேரத்தில் என்ன தேவைப்பட்டாலும் அதை எங்கு இருந்தாலும் ஒரு நண்பராக செய்துக்கொண்டும் இருக்கிறேன்.
எழுத்தாளர்களை மதிக்க தெரிந்தவர் ரஜினிகாந்த். என்னை மட்டுமின்றி ஜெயகாந்தன் பாலகுமாரன் என அனைவரிடமும் அன்பு காட்டி மரியாதயாக நடத்தியவர் ரஜினிகாந்த். எழுத்தாளர்கள் மீது அவருக்கு உண்மையிலேயே மரியாதை இருக்கிறது. என்னை வீட்டுக்கே வந்து காரில் அழைத்து செல்வார். காரில் கொண்டு வந்து வீட்டில் விட்டுவிட்டுச் செல்வார்.
அவரது சுயசரிதையை எழுதுவதற்காக 15 நாட்கள் அவருடன் நான் இருந்திருக்கிறேன். அந்த நாட்களில் ரஜினி என்பவர் யார் என்பதை நான் முழுமையாக உணர்ந்திருக்கிறேன். ஆனால் ஒரு கட்டத்தில் சுயசரிதை வேண்டாம் என்கிற ஒரு முடிவுக்கு அவர் வந்துவிட்டார். என்ன செய்யலாம் என்று என்னிடம் கேட்டார்.
அப்படியே அதை விட்டுவிடலாம் என்று சொல்லி விட்டேன். நீங்கள் சுயசரிதை எழுத ஆசைப்பட்டீர்கள். இப்போது வேண்டாம் என்று முடிவு செய்கிறீர்கள். அதை அப்படியே விட்டு விடுவோம் என்று சகஜமாக சொல்லி விட்டேன். ஆனால் அவர் சொன்ன விஷயங்கள் அனைத்தையும் அப்போதே என் நினைவில் இருந்து அகற்றி விட்டேன்.
எந்த இடத்திலும் அவர் சொன்ன எந்த ஒரு தகவலும் என்னிடம் இருந்து வராது. அவர் சொன்ன விஷயங்களை ஒருபோதும் நான் வெளியில் பேச மாட்டேன். அது என்னுடன் இருந்துவிடும். நான் பல மனிதர்களிடம் பேசுகிறேன். அவர்களை பற்றிய எந்த ஒரு தகவல்களையும் வெளியே சொல்வது இல்லை என்று அந்த நேர்காணலில் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.





