தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர் நடிகர் ஜெயம் ரவி. சமீபமாக அவர் தனது பெயரை ஜெயம் ரவி என்பதற்கு பதிலாக ரவிமோகன் என்று மாற்றியுள்ளார். மேலும் நடிகராக மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். நடிகர் யோகிபாபு நடிப்பில் ஒரு படத்தையும் ரவிமோகன் இப்போது டைரக்ட் செய்து வருகிறார்.
நடிகர் ரவிமோகன் பிறந்தநாள் வருகிற செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு ரசிகர்களை சந்திக்கும் விதமாக சென்னையில் நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதன் முன்னோட்டமாக கள்ளக்குறிச்சியில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது நடிகர் ரவிமோகன் கூறியதாவது, எனது முதல் படம் ஜெயம் வெளியான காலத்தில் இருந்து இன்று வரை ரசிகர்கள் காட்டி வரும் மாறாத அன்பும் பாசமும் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். அன்று சிறுவர்களாக என்னை பார்க்க வந்த ரசிகர்கள் இன்று தங்களது குழந்தைகளுடன் குடும்பமாக வந்திருப்பதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
என் மீது எப்போதும் அன்பை பொழியும் ரசிகர்கள் என்கூடவே இருப்பார்கள் என்று கர்வமாக சொல்வேன். தனி ஒருவன் படத்தின் இயக்குனர் மோகன் ராஜா தற்போது நடிகர் கார்த்தியின் படத்தை இயக்கிக் கொண்டே தனி ஒருவன் இரண்டாம் பாகத்திற்கான திரைகதையும் எழுதி வருகிறார். படப்பிடிப்பு பணிகள் முடிந்ததும் அதுகுறித்து நல்ல செய்தி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.
எனது நடிப்பில் வெளியாக உள்ள கராத்தே பாபு திரைப்படம் என் திரை பயணத்தில் ஒரு முக்கிய திருப்பு முனையாக இருக்கும். அதற்கான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும். இது தவிர ப்ரோ கிளப் மற்றும் யோகிபாபுவை வைத்து நான் இயக்கி வரும் இன் ஆர்டினரி மேன் ஆகிய படங்களின் பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
அரசியலுக்கு வர எனக்கு விருப்பம் இருக்கிறதா என்றால் மக்களுக்கு நல்ல செய்ய வேண்டும் என்றால் அதை எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம். அதில் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரலாம். அது தவறில்லை. எனக்கும் அந்த ஆர்வம் வரும் பட்சத்தில் அது குறித்து நானும் கண்டிப்பாக யோசிப்பேன். தேர்வுகள் மட்டுமே மாணவர்களின் வெற்றியை தீர்மானிப்பதில்லை. தங்களது கருத்துக்களை சரியாக வெளிப்படுத்துவதே மாணவர்களின் உண்மையான வெற்றி என்று நடிகர் ஜெயம் ரவி கூறினார்.





