பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் சுந்தர் சி. நடிகர் அஜீத்குமார் நடித்த சுந்தர் சி படத்தை இயக்கியவர். இப்போது மூக்குத்தி அம்மன் 2 மற்றும் புருஷன் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் சுந்தர் சி மேடையில் பேசியதாவது, நான் சொல்லப்போகும் இந்த விஷயம் நடிகர் எஸ்ஜே சூர்யாவுக்கு நினைவிருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.
நான் அஜீத்குமாரை வைத்து ஒரு படம் எடுத்தபோது இது நடந்தது. இரவு நேரத்தில் அப்போது ஷூட்டிங் நடக்கும். அப்போது ஒல்லியாக ஒருவர் வந்து அஜீத் குமாரிடம் பேசிவிட்டு செல்வார். அவர் வந்ததும் உடனே அஜீத் அவரிடம் போய் பேசிக்கொண்டு இருப்பார். அப்போது அவர்களுக்குள் ஏதாவது பிரச்சனையாகி விடும்.
உடனே செல்லமாகவும் கண்ணாபின்னா என்றும் அந்த நபரை அஜீத் சார் திட்டி விட்டு வருவார். அப்புறம் என் அருகில் வந்து அஜீத் சார் அமர்ந்து கொண்டு சாதாரணமாக பேசிக் கொண்டிருப்பார். இது தினமும் நடந்துக்கொண்டே இருந்தது. ஒருநாள் என்னால் சும்மா இருக்க முடியாமல் அஜீத் சாரிடமே அதுபற்றி நேரடியாக கேட்டு விட்டேன்.
அவரிடம், யாருங்க ஜி இவர்? தினமும் வருகிறார். பிரச்சனை வருகிறது. நீங்களும் அவரை சத்தம் போடுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அஜீத் சார், இவர்தான் சார் நான் இப்போ நடிக்கும் படத்தின் இயக்குனர் என்றார். என்ன ஜி எனக்கு முன்பே ஒரு இயக்குனரை இப்படி பேசுகிறீர்களே? எனக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது என்று சொன்னேன்.
அதைக் கேட்ட அஜீத் சார், சும்மா இருங்க. நாளை இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு இவர் எவ்வளவு உயரத்திற்கு போகப் போகிறார், என்ன ஆட்டம் போடப் போகிறார் என்று பாருங்க என்றார். சில நாட்கள் கழித்து விருது விழாவிற்கு சென்றபோது அங்கே எஸ்ஜே சூர்யா தனியாக ஆடிக் கொண்டிருந்தார். அந்த ஆட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எஸ்ஜே சூர்யாவுடன் நடிக்க ஹீரோக்களுக்கு அசுரத்தனமான தைரியம் வேண்டும். ஏனென்றால் அவர் நடிப்பு ராட்சசன். மார்க் ஆண்டனி படத்தில் ஒரு ஷாட்டை என்னிடம் காட்டினார் விஷால். ஜாக்கிரதையா இரு விஷால். கொஞ்சம் அசந்தால் கடித்து முழுங்கி துப்பி விடுவார் என்று அவரை நான் எச்சரித்தேன் என்று இயக்குனர் சுந்தர் சி அந்த விழாவில் எஸ்ஜே சூர்யா குறித்து பேசியிருக்கிறார்.





