தமிழ் சினிமாவில், சில நடிகர்களுக்கு சில கேரக்டர்கள் மட்டுமே சிறப்பாக பொருந்தி விடுகிறது. அந்த வகையில் ஆக்ஷன் படங்களாக நடித்து தள்ளும் ஹீரோக்கள் நிறைய உண்டு. அதுபோல், காமெடி வசனம் பேசியும், குடும்ப நியாயம் பேசியும் நடிக்கும் ஹீரோக்களும் உண்டு. இரண்டு வகையான படங்களும் தமிழ் சினிமாவில் வெற்றி நடை போட்டிருக்கின்றன.
கடந்த 30 ஆண்டுகால சினிமாவில், கடந்த 10 ஆண்டுகளில்தான் ஆக்சன் காட்சிகள் நிறைந்த படங்கள் மிக மிக அதிகம்.அப்போது ரஜினி, கமல் படங்களில் கூட சண்டை காட்சிகளை குறைத்து சென்டிமெண்ட், காதல், காமெடி என பல படங்கள் வந்திருக்கின்றன. விசு, வி சேகர், கே பாலசந்தர், பாலு மகேந்திரா படங்களும் இதே காலகட்டத்தில் வெற்றிகரமாக ஓடி இருக்கின்றன.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமா ஆக்சன் என்ற டிரண்டிங்கிலேயே ஓடிக்கொண்டு இருக்கிறது. நடிகர் குரு சோமசுந்தரம் கூட ஒரு நேர்காணலில் இதுபற்றி பேசும்போது, எத்தனை நாட்களுக்கு தான் மக்கள் ரத்தம், கத்தி, துப்பாக்கி என வன்முறை சண்டை காட்சிகளை ஏற்றுக்கொள்ள போகின்றனர். ஒரு கட்டத்தில் ஆக்சன் படங்களையும் மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்று கூறியிருந்தார்.
சர்வ நிச்சயமாக இதுதான் உண்மையாக இருக்கும். எல்லா கால கட்டத்துக்கும் ஒரே மாதிரியான படங்களை ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள். சமீபமாக வந்த படங்களான விடுதலை, விக்ரம், ஜெயிலர், பொன்னியின் செல்வன், டாக்டர், புஷ்பா, மார்க் ஆண்டனி என எல்லா படங்களுமே ஆக்ஷன் படங்களாகவே இருந்தன.
லியோ படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கும் விஜய் 68 படமும், ஆக்சன் படமாக தான் இருக்கிறது. அப்பா, மகன் என இரண்டு கேரக்டரில் விஜய் நடிக்கும் இந்த படத்தில் சிநேகா, மீனாட்சி சௌத்ரி, லைலா, பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் நடிக்கின்றனர். இதில் வில்லன் கேரக்டரில் அரவிந்த் சாமி நடிப்பதாக முதலில் இருந்தது. பிறகு அவர் நடிக்கவில்லை என விலகி விட்டார்.
ஆனால், அவருக்கு பதிலாக மோகன் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு சம்பளம் ரூ. 2 கோடி என கூறப்படுகிறது. இந்த படத்தில் 6 சண்டை காட்சிகள் உள்ளதாக, ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், இப்போது சண்டை காட்சிகள் தான் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மரத்தை சுற்றி கதாநாயகி அழகை வர்ணித்து பாடிய மோகன், பல படங்களில் மைக் பிடித்து பாடிய பாடகராக ரசிகர் மனதில் பதிந்தவர் மோகன். சண்டை காட்சி படங்களில் அதிகளவில் நடித்த பழுத்த அனுபவசாலியான, ஆக்ஷன் ஹீரோ விஜயை எப்படி சமாளிப்பாரோ என்று தெரியவில்லை. இதுதான் இப்போது வைரலாகக பேசப்பட்டு வருகிறது.





