நடிகை கங்கனா ரனாவத், பாலிவுட் நாயகியாக இருந்தாலும், தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார். அடிக்கடி ஏதேனும் சர்ச்சையாக கருத்துகளை தெரிவித்து, விமர்சனங்களுக்கு ஆளாகி வருபவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்ட தலைவி படத்தில், ஜெயலலிதா கேரக்டரில் நடித்திருந்தார். இதில் எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமி நடித்திருந்தார்.
சமீபத்தில், இயக்குநர் பி வாசு இயக்கத்தில், சந்திரமுகி 2 படத்தில், கங்கனா ரனாவத், சந்திரமுகி கேரக்டரில் நடித்திருந்தார். ரஜினி நடித்த சந்திரமுகி படம் அளவுக்கு இந்த படம், ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனாலும், கங்கனா ரனாவத் நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. ரசிகர்கள் பலரும் அவருக்காக, இந்த படத்தை பார்க்க வந்ததாக கூறினர்.
இயக்குநர் சர்வேஸ் மெஹ்ரா இயக்கத்தில், கங்கனா ரனாவத் நடித்த தேஜஸ் என்ற படம், வரும் 27ம் தேதி ரிலீஸ் ஆகிறது. நடிகர்கள் அன்சுல் சவ்தான், வருண் மித்ரா, ஆஷிஷ் வித்யார்த்தி, விஷாக் நாயர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை ரோணி ஸ்குருவாலா தயாரித்துள்ளார். இந்த படம், ராணுவத்தை மையக் கருவாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் விமானப்படை பைலட் கேரக்டரில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். கங்கனா ரனாவத் பைலட் ஆக இருக்கும் விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தி விடுகின்றனர். அந்த விமானத்தை மீட்டு, விமானத்தில் இருக்கம் பயணிகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதையாக உள்ளது. இது ஆக்சன் படமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த படம் குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கங்கனா ரனாவத், நம் நாட்டில் சோம்பேறிகளும், பொறுப்பற்றவர்களும் அதிகமாகி விட்டனர். அவர்களிடம் ஒழுக்கத்தையும் வளர்க்க வேண்டும். அதற்கு கல்லூரி படிப்பை முடித்த பின், ஒவ்வொருவருக்கும் ராணுவ பயிற்சி அளிப்பதை கட்டாயமாக்க வேண்டும். அப்போதுதான் சோம்பேறித்தனத்தை ஒழித்து ஒழுக்கமானவர்களை உருவாக்க முடியும். சோம்பேறிகளை சுறுசுறுப்பாக்க இதுதான் சிறந்த வழியாக இருக்கும்.
மேலும், ராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் தங்கள் உயிரை கூட பொருட்படுத்தாமல், நாட்டை எல்லை பகுதிகளில் நின்று பாதுகாக்கின்றனர். பல்வேறு துன்பங்களை சந்திக்கின்றனர். ஆனால், மக்கள் பலரும் முதுகுக்கு பின்னால் அவர்களை குறை கூறுகின்றனர். அது அவர்களை எவ்வளவு பாதிக்கும் என்பதையும், ராணுவ வீரர்கள் சந்திக்கும் மற்ற சில முக்கிய பிரச்னைகளையும் இந்த படம் பேசுவதாக இருக்கும் எனவும், கங்கனா ரனாவத் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.





