நடிகர் கமல்ஹாசன் படங்கள் என்றாலே, அது தனித்துவம் வாய்ந்த படமாக தான் பெரும்பாலும் இருக்கும். ஆனால் ஒரு சில படங்கள் ரசிகர்களால்
ஏற்றுக்கொள்ளப்படும். சில படங்கள் கண்டுக்கொள்ளப்படாமல் போய்விடும். ஆனால், அந்த படைப்புகளில் கமல்ஹாசன் சிரத்தை எடுத்து, மெனக்கெட்டு பல விஷயங்களை செய்திருப்பார். டெக்னிக்கலாக, தமிழ் சினிமாவுக்கு புதிய விஷயங்களை தந்திருப்பார்.
வழக்கமாக, கமல்ஹாசன் நடித்த ஜனரஞ்சகமாக படங்கள் எளிதில் வெற்றி பெறும். வசூலும் கணிசமாக இருக்கும். ஆனால் ஒரு சில படங்கள் கண்டுக்கொள்ளப்படாமல், ஒரு காலகட்டத்துக்கு பிறகு அது பெரிய அளவில் வரவேற்பை பெறும். அதற்கு உதாரணமாக அன்பே சிவம், ஹேராம் போன்ற படங்களை சொல்லலாம்.
அதுபோன்ற ஒரு படம்தான் ஆளவந்தான். கலைப்புலி தாணு தயாரிப்பில் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கடந்த 2001ம் ஆண்டில் வெளிவந்த படம். இதில் விஜய் என்ற கேரக்டரில் ராணுவ அதிகாரியாகவும், நந்து என்ற கேரக்டரில் மனநலம் தவறிய கேரக்டரிலும் கமல் நடித்திருப்பார். ரவீணா தாண்டன், மனீஷா கொய்ராலா, சரத்பாபு, அனுஹாசன் உள்ளிட்டோர் நடித்திருப்பர்.
இதில் விஜய் என்ற கேரக்டரில் கமல் நடித்துவிட்டு பிறகு, 6 மாதங்கள் கழித்து நந்து என்ற கேரக்டரில் மொட்டைத் தலை, 20 கிலோ எடை அதிகரிப்பு, உடல் முழுவதும் டாட்டூஸ் ஓவியங்கள் என வித்யாசமான கெட்டப்பில் கமல் நடித்திருப்பார். பெண்களை கண்டாலே ஆவேசப்படும் ஒரு முரட்டு வில்லனாக, கடைசியில் ஹீரோ கமலே, வில்லன் கமலை கொல்ல வேண்டிய சூழல் ஏற்படும்.
இந்த படத்தை பார்த்த ஹாலிவுட் இயக்குநர் குவெண்டின் டேரண்டினோ, வியந்து போய் பாராட்டி இருக்கிறார். இந்த ஆளவந்தான் படத்தை பார்த்து அவர் எடுத்த கில்பில் என்ற படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இதை அவரே தனது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு டெக்னிக்கலாக இந்த படம் இருந்தும் ரசிகர்களால் கண்டுக்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், ஆளவந்தான் படம் புதுப்பொலிவுடன், 30 நிமிட தேவையற்ற காட்சிகள் குறைக்கப்பட்டு, வரும் டிசம்பர் 8ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 1000 தியேட்டர்களில் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு செய்து வருகிறார். கமல் ரசிகர்கள் மீண்டும் கடவுள் பாதி, மிருகம் பாதியாக உள்ள தங்களது ஆண்டவரை திரையில் தரிசிக்க, டிசம்பர் 8ம் தேதிக்கு தயாராகி வருகின்றனர்.





