தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஹரி. அவரது இயக்கத்தில் வெளியான சாமி கோவில் தாமிரபரணி பூஜை ஐயா சிங்கம் சிங்கம் 2 வேல் போன்ற படங்கள் பெரிய வெற்றியை கொடுத்தன. மிகவும் விறுவிறுப்பான கதைகளை தரும் படைப்பாளியாக ஹரி இருந்து வருகிறார்.
கடைசியாக நடிகர் விஷால் நடிப்பில் ஹரி இயக்கிய ரத்னம் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதற்கிடையே நடிகர் பிரசாந்த் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்குவதாக 2 ஆண்டுகளுக்கு முன்பே தகவல் வெளியானது. இதற்கான துவக்க விழாவும் நடந்தது. ஆனால் அந்த படம் உருவாகாமல் அப்படியே டிராப் ஆகி விட்டது.
இயக்குனர் ஹரி இயக்கிய முதல் படம் தமிழ். இந்த படத்தில் ஹீரோவாக நடித்தவரே பிரசாந்த் தான். நாயகியாக சிம்ரன் நடித்திருந்தார். அதன்பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஹரி பிரசாந்த் கூட்டணியில் புதிய படம் உருவாக்க திட்டமிட்டு, அந்த படத்தை பிரசாந்தின் அப்பா நடிகர் தியாகராஜனே தயாரிக்கவும் இருந்தார். ஆனால் படம் அப்படியே நின்றுபோய்விட்டது.
இந்த படத்துக்காக நடிகர் பிரசாந்தை உடல் எடையை குறைக்குமாறு இயக்குனர் ஹரி கூறியிருக்கிறார். அதை பிரசாந்த் கண்டுக்கொள்ளாமல் அலட்சியப்படுத்தி விட்டார். ஆக்சன் கதைக்கு ஹீரோ பிட் ஆக வேண்டும் என்பதால் இந்த விவகாரத்தால் இந்த படத்தை விட்டு இயக்குனர் ஹரி விலகி விட்டார்.
அதே நேரத்தில் இந்த படத்துக்காக இயக்குனர் ஹரிக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் உடன், ஸ்டோரி டிஸ்கஷன் என்ற வகையில் ஏற்பட்ட பல லட்சங்கள் செலவையும் திருப்பித் தருமாறு தயாரிப்பாளர் தியாகராஜன் கேட்டுள்ளார். இதற்கு ஹரி மறுத்த நிலையில், அட்வான்ஸை மட்டுமே திருப்பி தருவதாக கூறியிருக்கிறார். இந்த பஞ்சாயத்து கவுன்சிலில் புகார் தரப்பட்டு பிரச்னை நடந்து வருகிறது.
இதற்கிடையே நடிகர் பிரசாந்த் நடிப்பதாக இருந்த கதையில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அதர்வா ஹீரோவாக நடிப்பதாகவும் படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து தோல்வி படங்களை தந்து வரும் நடிகர் அதர்வாவுக்கு இந்த படமாவது பெரிய வெற்றியை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.





