டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. இந்த படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கோவையில் உள்ள ஒரு பிரபல மாலில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் மற்றும் நடிகர் தனுஷ் மற்றும் நடிகர்கள் சத்யராஜ் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் டிரெய்லர் வெளியிட்ட பிறகு நடிகர் தனுஷ் பேசியதாவது, இட்லி கடை ரொம்பவும் சிம்பிளான ஒரு சாதாரண படம் தான். உங்கள் குடும்பத்தோடு குழந்தைகளோடு தியேட்டருக்கு சென்று ரசித்து பார்க்கக்கூடிய ஒரு எமோஷனலான படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த படத்தில் சத்யராஜ் ராஜ்கிரன் பார்த்திபன் சமுத்திரக்கனி என பல சீனியர்கள் நடித்திருக்கின்றனர்.நான் சொல்லும் விஷயங்களை புரிந்து கொண்டு சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள். அவர்களுக்கு நான் ரொம்பவே கடமைப்பட்டுள்ளேன்.
சின்ன வயதில் இருந்தே எனக்கு சமையல் கலைஞன் ஆக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது. அந்த ஆசை எனக்கு இருந்ததால்தான் என்னவோ தொடர்ந்து சமையல் சம்பந்தப்பட்ட கதைகளாகவே கிடைத்து வருகிறது. ஜெகமே தந்திரம் படத்தில் புரோட்டா போட்டேன். திருச்சிற்றம்பலம் படத்தில் டெலிவரி பாயாக இருந்தேன். ராயன் படத்தில் பாஸ்ட்புட் வைத்திருந்தேன். இந்த படத்தில் இட்லி கடை வைத்திருக்கிறேன்.
எனக்காக நான் எழுதும் கதைகள் மட்டுமின்றி மற்ற இயக்குனர்களும் அதுபோன்ற கதைகளுடனே என்னை தேடி வருகிறார்கள். என்ன நினைக்கிறோமோ அதுவாகவே நாம் மாறுகிறோம். அதாவது எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்வது போன்று நான் நடிகரான பிறகும் சமையல் கலைஞன் ஆக வேண்டும் என்ற என்னுடைய ஆசை என்னை துரத்திக் கொண்டே வருகிறது.
அதனால் தான் இளைஞர்களும் வாழ்க்கையில் நம் எண்ணம் சாதிக்க வேண்டும் என்பதை நோக்கியே செல்ல வேண்டும். நம்மை முதலில் நம்ப வேண்டும். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். அப்படி உழைத்தால் யார் வேண்டுமானாலும் தாங்கள் நினைத்ததை சாதிக்க முடியும். அதற்காக அனைவரும் ஒர்க் அவுட் செய்யுங்கள். அப்படி செய்தால் நீங்கள் நினைத்ததை எளிதில் சாதிக்க முடியும். நான் கருத்து சொல்வதாக யாரும் நினைக்க வேண்டாம். என் வாழ்க்கையில் நடந்ததை உங்களுக்குச் சொல்கிறேன்.
கண்டிப்பாக இதை எல்லாம் நீங்கள் பின்பற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன். என்னுடைய ரசிகர்கள் யாருடைய வம்புக்கும் செல்ல மாட்டார்கள். அதில் எனக்கு பெரிய கர்வமும் சந்தோஷமும் உள்ளது. சினிமாவை நம்பி நிறைய பேர் இருக்கிறார்கள். அதனால் எல்லோரது படமும் ஓட வேண்டும். அது உங்கள் கைகளில் தான் உள்ளது. சரியான விமர்சனங்களை பார்த்துவிட்டு அந்த படங்களை பார்க்கலாமா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்று நடிகர் தனுஷ் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.





