நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க ஆரம்ப காலத்தில் அவருக்கு பெரிய பெயரை பெற்றுத் தந்த படம் 16 வயதினிலே. இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் பரட்டையன் கேரக்டரில் ரஜினி நடித்த பிறகுதான் தமிழ் சினிமாவில் அவருக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது.
அந்த படத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர் கே பாக்யராஜ். அதனால் 16 வயதினிலே படப்பிடிப்பு தளத்தில் நடிப்பும் வசனமும் ரஜினிக்கு சொல்லிக் கொடுத்ததே கே பாக்யராஜ் தான். இது எப்படி இருக்கு? என்ற டயலாக் டெலிவரி மாடுலேசன் பாக்யராஜ் தான் கற்றுக் கொடுத்தார் என்று ஒரு விழாவில் ரஜினியே வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
இதையடுத்து கடந்த 1985ம் ஆண்டில் கே பாக்யராஜ் உச்சக்கட்ட புகழில் இருந்தார். இயக்குனராக நடிகராக பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தார். அப்போது எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த் அம்பிகா நடித்த நான் சிகப்பு மனிதன் படத்தில், சின்ன சேலம் சிங்காரம் என்ற சிஐடி போலீஸ் ஆபிஸராக கே பாக்யராஜ் நடித்திருப்பார்.
அந்த கேரக்டரில் கே பாக்யராஜ் தான் நடிக்க வேண்டும் என்று ரஜினியே விரும்பி கேட்டுக் கொண்டதால் உடனே கே பாக்யராஜ் நடிக்க ஓகே சொல்லி விட்டார். ஆனால் 1998ம் ஆண்டில் கே பாக்யராஜ் நடித்த வேட்டிய மடிச்சுக்கட்டு படத்தில் கேமியோ ரோலில் ரஜினியை நடிக்குமாறு கே பாக்யராஜ் கேட்ட போது ரஜினி மறுத்து விட்டார்.
பிறகு மதுரை முத்துப்பாண்டி என்ற அந்த கேரக்டரில் தெலுங்கு நடிகர் சாய்குமார் நடித்திருந்தார். அவரது நடிப்பும் மிக சிறப்பாகவே இருந்தது. அதாவது பயந்த சுபாவம் கொண்ட கே பாக்யராஜை வில்லன்களிடம் இருந்து காப்பாற்றும் ஒரு தாதா கேரக்டர்தான் அது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில்தான் சிறுவனாக கே பாக்யராஜின் மகன் சாந்தனுவும் நடித்திருந்தார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு விழாவில் இதுகுறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார். கே பாக்யராஜ் கேட்ட போது நான் அந்த படத்தில் நடித்திருக்க வேண்டும். அது பாக்யராஜூக்கு பொருளாதார ரீதியாக பெரிய உதவியாக இருந்திருக்கும். இன்று வரை அது எனக்கு மனதில் ஒரு வருத்தமாகவே இருந்து வருகிறது என்று பேசியிருக்கிறார். இந்த தகவலை மறைந்த இயக்குனர் கே பாக்யராஜே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.





