தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். ஆரம்பத்தில் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்த அவர் பிறகு ஜெண்டில்மேன் படம் மூலம் இயக்குனராக மாறினார். தொடர்ந்து காதலன் முதல்வன் அந்நியன் சிவாஜி எந்திரன் இந்தியன் பாய்ஸ் என பல சூப்பர் ஹிட் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்தார்.
இயக்குனர் ஷங்கர் கடந்த 30 ஆண்டுகளில் அவர் டைரக்ட் செய்த படங்களின் எண்ணிக்கை 15 தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கடைசியாக ஷங்கர் இயக்கிய கமல் நடித்த இந்தியன் 2 மற்றும் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் ஆகிய 2 படங்களை தவிர மற்ற 13 படங்களும் ஷங்கர் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக கொண்டாடப்பட்டன.
இந்தியன் 3 படம் அடுத்து ஷங்கர் இயக்கத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் கமல் நடிக்க வேண்டிய 30 நாள் காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது. அதை கமல் நடித்து முடித்து விட்டால் இந்தியன் 3 விரைவில் திரைக்கு வரும். அதன்பிறகு மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற வரலாற்று நாவலை பிரமாண்ட படமாக உருவாக்கும் பணிகளில் ஷங்கர் இப்போது ஈடுபட்டு வருகிறார்.
இயக்குனர் ஷங்கரை போலவே தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் ஒரு இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ். 50 ஆண்டுகளை அவர் சினிமாவில் நிறைவு செய்திருக்கிறார். சமீபத்தில்தான் அந்த பொன்விழா ஆண்டு பாராட்டு விழா நடந்தது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இளையராஜா போன்றவர்கள் பங்கேற்று இயக்குனர் பாக்யராஜை பாராட்டினார்கள்.
ஆரம்பத்தில் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு சுவரில்லாத சித்திரங்கள் படம் மூலம் இயக்குனராக மாறியவர் கே பாக்யராஜ். இயக்குனர் நடிகர் கதாசிரியர் இசையமைப்பாளர் வசனகர்த்தா கவிஞர் என பன்முக திறமை கொண்ட பாக்யராஜ், இந்திய அளவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஷங்கர் கூறுகையில், சினிமாவை பத்திய எவ்வளவோ புத்தகங்கள் வந்திருக்கிறது. ஆங்கிலத்திலும் புத்தகங்கள் வந்திருக்கு. ஆனால் அதெல்லாம் ஹாலிவுட் இயக்குனர்களுக்கு தான் உதவும். நம்ம ஊருக்கு டைரக்டர் பாக்யராஜ் சார் திரைக்கதை பற்றி புத்தகம் எழுதணும். ஏனென்றால் இப்பவும் அவர்தான் திரைக்கதையில் கிங் ஆக இருக்கிறார். இதுதான் என்னுடைய கோரிக்கை என்று இயக்குனர் ஷங்கர் வேண்டுகோளாக கூறியிருக்கிறார்.





