சினிமா நடிகர்கள், அரசியலுக்கு வருவது என்பது பல ஆண்டு காலமாக நடக்கிற ஒரு விஷயம்தான். சினிமாவில் நடிக்கும்போது ரசிகர்கள் தரும் ஆதரவை பார்த்து, அரசியலுக்கு வந்தாலும் இதே ஆதரவு நமக்கு கிடைத்துவிடும் என்று தப்புக்கணக்கு போடுகின்றனர். அரசியல் என்பது வேறு, சினிமா என்பது வேறு என்று நடிகர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் ரசிகர்களாகிய மக்கள் அதில் தெளிவாக தான் இருக்கின்றனர்.
இதுவரை அரசியலுக்கு வந்தவர்களில், தமிழக அரசியலில் ஜெயித்தவர்கள் 2 பேர்தான். அதில் ஒருவர் எம்ஜிஆர். மற்றொருவர் விஜயகாந்த். மற்றபடி பாக்யராஜ், டி ராஜேந்தர், சரத்குமார், கார்த்திக் குறிப்பாக சிவாஜி கணேசன் என பலரும் வந்து தோற்றுப் போயிருக்கின்றனர். சிவாஜி கணேசன் படம் என்றால், இப்போதைய இளம் தலைமுறைக்கு கூட பிடிக்கிறது. ஆனால் அவரை அரசியலில் அவரது அன்றைய ரசிகர்களே ஏற்றுக்கொள்ளவில்லை.
ரஜினிகாந்துக்கு மக்கள் மத்தியில் செம மாஸ், 1990களில் இருந்தது. அப்போது அவர் அரசியலுக்கு வந்திருந்தால் நிச்சயம் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருப்பார். அன்றைய அரசியல் விமர்சகர்கள், ரஜினிக்கு முதலமைச்சர் ஆக அதிக வாயப்பிருப்பதாக கூட கூறினர். ஆனால் ரஜினிகாந்த் அதில் இருந்து பின்வாங்கி விட்டார்.
ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்குள் வந்தார். மக்கள் நீதிமய்யம் என்ற கட்சியை துவக்கிய அவர், அதிமுகவும் சரியில்லை, திமுகவும் சரியில்லை என்றுதான் பேசிக்கொண்டு இருந்தார். ஸ்டாலின் பேசிய டிவியை, தன் கையில் இருந்த டார்ச் லைட்டால் வீசி அடித்து நொறுக்கினார். ஆனால் இப்போது திமுகவுக்கு ஆதரவாக நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்துக்கொண்டு இருக்கிறார்.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருந்தும், கமல்ஹாசனால் சட்டசபை தேர்தலிலும் ஜெயிக்க முடியவில்லை. நாடாளுமன்ற தேர்தலிலும் ஜெயிக்க முடியவில்லை. கட்சியில் இருந்த முக்கிய நிர்வாகிகளும் எப்போதோ கம்பி நீட்டி விட்டனர். இப்படியே போனால் கட்சி போஸ்டர் ஒட்டக் கூட ஆள் இருக்காது என்ற நிலைமையில்தான் கமல் இப்போது கட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறார்.
இந்த சூழலில், திமுக கூட்டணிக்கு ஆதரவாக கமல் களமிறங்க காரணம், அவர்கள் தருவதாக சொன்ன ஒரு ராஜ்ய சபா எம்பி சீட்டுதான். அதற்காக தான் தக்லைப் படத்தில் நடிப்பதை கூட விட்டுவிட்டு அனல் பறக்கும் வெயிலில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஏம்பா, கமல்ஹாசன் கேட்டு அவருக்கு, அவரது கட்சிக்கே யாரும் ஓட்டுப் போடலே. இப்போது திமுகவுக்கு ஆதரவா ஓட்டுக் கேட்டு வர்றாரே, இது அவருக்கே காமெடியா தெரியலையா என அவரது கட்சியினரே கிண்டலடித்து வருகின்றனர்.





