தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் தக்லைஃப். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. அதனால் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. நாயகன் படத்துக்கு பின் 37 ஆண்டுகள் கழித்து மணிரத்னம் – கமல் இணைந்த தக்லைஃப் படம் இப்படி தோல்வியை சந்திக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
சினிமாவில் நடிகராக ஒரு படைப்பாளியாக பல சாதனைகளை படைத்த நடிகர் கமல்ஹாசன், கடந்த 2018ம் ஆண்டில் மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கினார். ஆனால் அவருக்கு அரசியலில் எதிர்பார்த்த வரவேற்பு மக்களிடம் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேர்தல்களில் படுதோல்விகளை சந்தித்த கமல்ஹாசன், இப்போது திமுக ஆதரவுடன் ராஜ்யசபா எம்பி ஆகியிருக்கிறார்.
இந்நிலையில் சென்னையை அடுத்த வண்டலூர் – கேளம்பாக்கம் ரோட்டில் விஐடி பல்கலைக் கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராஜ்யசபா எம்பி நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அங்கு நடந்த விழாவில் நடிகர் கமலஹாசன் பேசியதாவது, நாடு சுதந்திரம் பெற்ற பின் அனைத்து விஷயங்களிலும் நாம் வெற்றி அடைந்து விட்டோமா?
நாட்டில் ஜாதி மதம் வேறுபாடுகளை களைவதில் நாம் தோல்வி அடைந்துள்ளோம். நானும் என் தொழிலில் தோல்வி அடைந்திருக்கிறேன். அதை ஒப்புக் கொள்வதில் தயக்கம் இல்லை. ஆனால் ஒவ்வொரு தோல்வியிலும் புதிய விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். மாணவர்களின் முன்பு பேசுவது எனக்கு உத்வேகம் அளிக்கிறது.
நான் கலை உலகத்தில் இன்றும் படித்துக் கொண்டும் கற்றுக் கொண்டும் இருக்கிறேன். சோதனைகளை சாதனைகளாக மாற்ற பழகிக் கொள்ளுங்கள். உலகின் பல நாடுகளில் பணியாற்றி இந்தியாவுக்கும் இந்த கல்வி நிலையத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்கள் தோல்விகளை இறக்கி வைத்து வெற்றிகளை சுமந்தவர்களாக உள்ளனர்.
வெளிநாட்டுக்கு செல்லுங்கள். அங்கு கற்றுக் கொள்ளுங்கள். அங்கு சம்பாதித்து திரும்பி உங்கள் தாய் நாட்டுக்கு சேவை செய்யுங்கள். திமிரோ வீரமோ வணக்கத்திற்கு உரியது அல்ல. நம் தாய்மொழி தான் வணக்கத்திற்கு உரியது. வீரத்தின் உச்சமே அகிம்சை. நாத்திகம் என்ற வார்த்தையை ஆத்திகம்தான் தந்தது. நான் நாத்திகன் அல்ல, பகுத்தறிவாளன். பகுத்தறிவு என்பது அறிவு சார்ந்தது என்று நடிகர் கமல்ஹாசன் அந்த விழாவில் பரபரப்பாக பேசியிருக்கிறார். இப்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.





