- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த பிரபல நடிகர் - பிறகு சம்மதித்தது எப்படி? நல்லவனுக்கு நல்லவன்...

ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த பிரபல நடிகர் – பிறகு சம்மதித்தது எப்படி? நல்லவனுக்கு நல்லவன் படம் குறித்து வெளியான தகவல்!

- Advertisement -

நல்லவனுக்கு நல்லவன் படம் தொடங்கப்பட்ட போது நாயகன் ரஜினியை எதிர்க்கும் 2வது நாயகன் கேரக்டர் அதில் இருந்தது. அதில் ஒரு முக்கிய நடிகனையே நடிக்க வைக்க வேண்டும் என்று இயக்குனர் எஸ்பி முத்துராமன் தீர்மானித்தார். பல பெயர்கள் சொல்லப்பட்ட நிலையில் கடைசியில் கார்த்திக்கின் பெயர் வந்தது.

கார்த்திக் நடிக்க வந்த பிறகு அலைகள் ஓய்வதில்லை படத்துக்குப் பிறகு பெரிய அளவில் பேசப்படும் படம் அமையவில்லை. இயக்குனர் பாரதிராஜாவே எடுத்த வாலிபமே வா வா ராமநாராயணனின் கண்ணே ராதா விசுவின் ராஜதந்திரம் பகவதிபுரம் ரயில்வே கேட் தாய் மூகாம்பிகை ஆயிரம் நிலவே வா என எல்லாமே சுமாராக தான் போனது.

- Advertisement -

கலைஞானத்தின் இளஞ்ஜோடிகள் தேவரின் அதிசயப் பிறவிகள் படங்கள் மட்டுமே தப்பித்தது. கார்த்திக்கும் தோல்விகளிலிருந்து மீண்டு வர ஒரு நல்ல படத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். இந்த நிலையில் முத்துராமன் படக்குழு நல்லவனுக்கு நல்லவன் பட கதாபாத்திரத்தை சொல்லி கால்ஷீட் கேட்க கார்த்திக் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார்.

இந்த விஷயம் ஏவிஎம் சரவணன் காதுக்கு போக, முத்துராமன், நீங்கள் தான் கார்த்திக்கிடம் பேசி சம்மதம் வாங்க வேண்டும் என்று சொல்ல, சரவணன் கார்த்திக்கை சந்தித்துள்ளார். சரவணனிடமும் கார்த்திக் மறுத்திருக்கிறார். அதற்கு சரவணன், இப்போ இந்தப் படத்தில் நடித்தால் எங்கள் நிறுவனத்தின் அடுத்தப் படத்தில் நீங்க தான் ஹீரோ. முத்துராமனே அதையும் இயக்குவார் என தடாலடியாக சொல்ல கார்த்திக் உடனே சம்மதம் சொல்லி விட்டார்.

- Advertisement -

அப்படி தான் கார்த்திக் ரஜினியோடு நடித்த அந்த கதாபாத்திரம் சிறப்பாக பேசப்பட்டது. ரஜினியை கார்த்திக் அவமானப்படுத்தும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் அனல் பறந்தது. ஆனாலும் க்ளைமேக்ஸில் கார்த்திக் திருந்தி ரஜினியோடு சேர்ந்ததும் அது காணாமல் போய்விட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் வில்லனாக மோதி ரஜினி ரசிகர்களிடம் திட்டு வாங்காமல் தப்பித்த ஒரே நடிகர் கார்த்திக் மட்டுமே.

அவரின் தனித்திறமை தான் இதற்கும் அவர் மேல் ரசிகர்கள் வைத்த அபிமானமுமே காரணம். கார்த்திக்கிடம் சொன்ன மாதிரியே ஏவி.எம் சரவணன் கார்த்திக்கை வைத்து புதிய படம் ஒன்றை எடுத்தார். அந்தப் புதிய படத்தை விட நல்லவனுக்கு நல்லவன் பாத்திரம் சிறப்பாக இருந்தது உண்மை. அப்படி கார்த்திக்கிடம் சொன்ன சொல்லுக்காக சரவணன் எடுத்தப் படம் தான் கார்த்திக் ராதா அனுராதா நடித்த நல்ல தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்