கடந்த 2015ம் ஆண்டில் இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் புலி. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஹன்சிகா மோத்வானி பிரபு ஸ்ரீதேவி கிச்சா சுதீப் தம்பி ராமையா கருணாஸ் இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இது மன்னர் கால படமாக இருந்தது.
இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. மேலும் இந்த படத்தில் குள்ள மனிதர்கள் பேசும் ஆமை தவளை கிளி என மாயாஜால கதையம்சத்தில் இருந்தது. மன்னராக விஜய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் நடித்த புலி படத்தின் தோல்வி குறித்து அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் நடிகர் நட்டி நடராஜ் ஒரு நேர்காணலில் கூறியதாவது, புலி படம் தப்பான பப்ளிசிட்டியால் தான் தோல்வி அடைஞ்சிடுச்சு. புலி படம் பண்ணும் போதே விஜய் சார் என்கிட்ட பேசும் போது, என் ரசிகர்களுக்காக நிறைய படம் பண்ணிட்டேன்.
ஆனால் 8 வயசுல இருந்து 15 வயசுல இருக்குற சின்ன பசங்களுக்கு நான் படமே பண்ணலே. அதனாலதான் இந்த படத்தை பண்றேன்னு சொன்னார். புலி படத்துல பேசுற ஆமை காக்கா தவளை என்று குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருக்கும். இது குழந்தைகள் ரசிக்கிற ஒரு படமாக இருந்தது.
ஆனா அந்த அதிக பொருட்செலவுல எடுக்கப்பட்ட ஒரு படம். போட்ட பணத்தை திரும்ப எடுக்கணும்ன்னு படத்தை ஒரு ஆக்சன் படம் மாதிரி விளம்பரப்படுத்திட்டாங்க. அதனால் வழக்கமான விஜய் படம் மாதிரி இருக்கும் என்று நம்பி வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைஞ்சுட்டாங்க. படம் சரியாக போகலே.
இது மட்டும் குழந்தைகளுக்கான படம்ன்னு விளம்பரப்படுத்தி இருந்திருந்தால் ஒரு குழந்தைக்காக ஒரு குடும்பமே புலி படத்தை பார்த்து பெரிய ஹிட் ஆகி இருக்கும் என்று நடிகர் நட்டி நடராஜ் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். நடிகர் விஜய் நடித்த யூத் படத்திலும் நட்டி நடராஜ் ஒளிப்பதிவாளரக பணி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





