சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியதாவது, இயக்குனர் கே பாக்யராஜ் அடுத்தடுத்து இயக்கிய படங்கள் தொடர் தோல்வியை சந்தித்ததால் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளானார். அந்த நேரத்தில் தான் அவர் வேட்டிய மடிச்சு கட்டு என்ற படத்தை தயாரித்து நடித்தார். அப்போது அந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார்.
அவரது மார்க்கெட் காரணமாக அந்த படம் நல்ல விலைக்கு வியாபாரமாகும். படத்துக்கும் ஒரு நல்ல ஹைப் கிடைக்கும் என்றும் பாக்யராஜ் நம்பினார். இதற்காக அவர் நேரடியாக ரஜினிகாந்த் வீட்டுக்கே சென்று தனது பொருளாதார பின்னடைவை சொன்னார். ஒரு சில நாட்கள் மட்டும் வேட்டிய மடிச்சுக் கட்டு படத்தில் நடித்து கொடுக்குமாறு ரஜினியிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால் ரஜினிகாந்த் அதற்கு கால்ஷீட் தர மறுத்துவிட்டார்.
இதற்கு ரஜினிகாந்த் சொன்ன காரணம், ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தால் தனக்கு தெரிந்த மற்ற நண்பர்களும் தயாரிப்பாளர்களும் தங்களது படங்களில் அதே போல் கேமியோ ரோலில் நடிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்துவார்கள் என்பதால் பாக்யராஜ் கேட்டும் கால்ஷீட் தரவே முடியாது என மறுத்துவிட்டார். ஆனால் 1985ம் ஆண்டில் கே பாக்யராஜ் உச்சகட்ட நட்சத்திர இமேஜில் பெரிய நடிகராக இருந்தபோது ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டதற்காக நான் சிகப்பு மனிதன் படத்தில் போலீஸ் சிஐடியாக ஒரு சின்ன கேரக்டரில் நடித்து கொடுத்தார்.
அதாவது ரஜினியே பாக்யராஜூக்கு போன் செய்து நடித்து தருமாறு கேட்டார். ரஜினிகாந்த் இப்படி கேட்டதுமே உடனடியாக சம்மதித்து அந்த படத்தில் நடித்திருந்தார் பாக்யராஜ். அப்படிப்பட்ட பாக்யராஜ் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உதவி என்று வீடு தேடி வந்தபோது ரஜினிகாந்த் மறுத்தது நியாயமற்ற செயலாகவே உள்ளது.
இப்படி ஒரு மறுப்பை பாக்யராஜூக்கு மட்டுமின்றி டி ராஜேந்தருக்கும் ரஜினிகாந்த் செய்துள்ளார். ராகம் தேடும் பல்லவி படத்தின் விநியோகத்தில் டி ராஜேந்தருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அதிலிருந்து மீள்வதற்காக டி ராஜேந்தர் இயக்குவதாக இருந்த உயிருள்ள வரை உஷா படத்தில் நடிக்குமாறு ரஜினிகாந்திடம் அவர் கால்சீட் கேட்டு உள்ளார். ஆனால் ரஜினிகாந்த் மறுத்து விட்டார்.
நான் பெரிய தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் மட்டுமே நடிப்பதை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறேன் என்று சொல்லி டி ராஜேந்தர் படத்துக்கு கால்சீட் தர மறுத்து விட்டார். கோடிக்கணக்கில் பணம் வைத்துள்ள பெரிய தயாரிப்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாரே தவிர நலிவடைந்த சக கலைஞர்களுக்கும் ஒரு படம் நடித்துக் கொடுத்து கூட உதவ முன்வரவில்லை என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.





