தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சத்யராஜ். அதன்பிறகு இயக்குனர் பாரதிராஜா அவரை கடலோர கவிதைகள் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அந்த படத்தில் நடிகை ரேகாவும் டீச்சர் கேரக்டரில் புதிய நாயகியாக அறிமுகமாகி இருந்தார். கடலோர கவிதைகள் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து நடிகர் சத்யராஜ் பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். அவர் நடித்த நடிகன் ரிக்சா மாமா பிரம்மா சின்னதம்பி பெரியதம்பி அமைதிப்படை திருமதி பழனிசாமி தெற்கு தெரு மச்சான் தாய்மாமன் உள்ளிட்ட பல படங்கள் அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அவருக்கு அமைந்தன.
தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் சத்யராஜூக்கு 2010 ஆண்டுகளுக்கு பிறகு மார்க்கெட் சரிந்தது. அதன்பிறகு அவர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்போதும் பல படங்களில் நடிகர் சத்யராஜ் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கதாநாயகன் அல்லது கதாநாயகியின் அப்பா அண்ணன் போலீஸ் அதிகாரி வக்கீல் டாக்டர் போன்ற வேடங்களில் தொடர்ந்து சத்யராஜ் படங்களில் நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் பாகுபலி படத்தில் கட்டப்பா கேரக்டரில் நடிகர் சத்யராஜ் நடித்திருந்தது மிகப்பெரிய அளவில் அவருக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்த படத்துக்கு பிறகு தெலுங்கு இந்தி மொழி படங்களிலும் நடிகர் சத்யராஜ் அதிகமாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார் என்ற படத்திலும் நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். சமீபத்தில் வா வாத்தியார் பட நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜ் மேடையில் பேசியதாவது, வாத்தியார் எம்ஜிஆர் கெட்டப்பில் கார்த்தி நடித்ததால் சரி, நம்ம வீட்டு பிள்ளை கார்த்தி நடிச்சுட்டு போகட்டும் என்று இருந்தேன்.
இதேபோல் தான் ஆயிரத்தில் ஒருவன் படத்திலும் கார்த்தி நடித்த போது, கார்த்திதானே என்று பேசாமல் கம்முன்னு இருந்தேன். வேற யாராவது எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் டைட்டிலில் நடித்திருந்தால் பயங்கரமா எனக்கு எரிந்திருக்கும். நம்ம வீட்டு பிள்ளை கார்த்தி. அதனால்தான் சும்மா இருக்கிறோம் என்று நடிகர் சத்யராஜ் பேசியிருக்கிறார். நடிகர் சத்யராஜ் மிகத் தீவிரமான எம்ஜிஆர் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.





