தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகர் செந்தில். பொய்சாட்சி என்ற படத்தில் சென்னைக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் செந்திலை பொய் சொல்லி அழைத்துச் சென்று ஓட்டலில் சாப்பிட வைத்துவிட்டு, பில் தராமல் ஏமாற்றி விட்டுச் சென்றுவிடுவார் கே பாக்யராஜ். அந்த படம்தான் செந்திலுக்கு நல்ல அறிமுகமாக இருந்தது.
பிறகு பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பாராட்டை பெற்று முன்னணி காமெடி நடிகராக மாறினார். குறிப்பாக கவுண்டமணி செந்தில் காமெடி காட்சிகள் பெரிய அளவில் கடந்த 1980 90களில் ஹிட் ஆகின. பிறகு பல படங்களில் தனியாகவும் காமெடி காட்சிகளில் செந்தில் நடித்திருந்தார்.
நடிகர் ரஜினியுடன் முத்து வீரா படையப்பா உள்ளிட்ட பல படங்களில் செந்தில் நடித்திருக்கிறார். குறிப்பாக படையப்பா படத்தில் ரஜினியுடன் படம் முழுக்க செந்தில் அவர் நண்பராக நடித்திருப்பார். குறிப்பாக செந்தில் பெண் பார்க்க செல்லும் காட்சியில், ரஜினி டிரஸ்சை செந்தில் போட்டுக்கொள்ள அதை ரஜினி சொல்லி காட்ட ஒரு கட்டத்தில் அந்த டிரஸ்சை கழட்டி வீசிவிட்டு செந்தில் ஓட்டம் பிடித்து விடுவார். இந்த காட்சி பெரிய அளவில் ரசிக்கப்பட்டது.
இப்போது ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி கடந்த 12ம் தேதி படையப்பா படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டு கடந்த சில தினங்களில் ரூ. 10 கோடிக்கு மேல் வசூலை அள்ளியுள்ளது. ரசிகர்களின் அமோக வருகையில் தியேட்டர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் ஓம் சக்தி அங்காள பரமேஸ்வரி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த நடிகர் செந்தில் அங்கிருந்த செய்தியாளர்களிடம் கூறியதாவது, படையப்பா 2 படம் எடுத்தால் அதே கேரக்டர் கொடுத்தாலும் சரி, பக்கத்துல நிக்கிற கேரக்டர் கொடுத்தாலும் சரி நடிக்கிறேன் என்று தனது ஆசையை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
சமீபத்தில் ரஜினிகாந்த் படையப்பா ரி ரிலீஸ் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய போது, இப்போது நிறைய படங்கள் 2ம் பாகமாக வெளிவந்து வெற்றி பெறுகின்றன. படையப்பா படத்தில் நீலாம்பரி, அடுத்த ஜென்மம் எடுத்தாவது மீண்டும் வந்து என்னை பழிவாங்குவேன் என்று சொல்வார். அதனால் படையப்பா 2 பாகம் எடுக்க திட்டமிட்டு வருகிறோம் என்று கூறியிருந்தார். அதனால் நடிகர் செந்திலின் படையப்பா 2 படத்தில் நடிக்கும் விருப்பம் நிச்சயம் நிறைவேற ரஜினி வாய்ப்பளிப்பார் என்றே தெரிகிறது.





