நடிகர் சிவக்குமார், தமிழ் சினிமாவில் மிக மூத்த நடிகராக மதிக்கப்படுபவர். எம்ஜிஆர், சிவாஜி போன்ற தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களோடு பல படங்களில் நடித்தவர். இவருக்கு தமிழ் சினிமாவில் மார்க்கண்டேயர் என்ற பட்டம் எப்போதுமே உண்டு.
ஏனெனில் நடிகர் சிவக்குமாரிடம் எந்த கெட்டப்பழக்கமும் இல்லை. மதுபானம் அருந்துவது, புகை பிடிப்பது, மற்ற பெண்களுடன் தவறான சகவாசம் போன்ற தவறான செயல்களில் ஈடுபடாத மன உறுதியாளர். எப்போதும் யோகா, தியானம் என உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்.
சிவக்குமார், கோவையை அடுத்துள்ள சூலூரில் காசி கவுண்டன்புதூர் என்ற கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். கணவர் இல்லாத தாயின் அரவணைப்பிலும், பராமரிப்பிலும் வளர்ந்தவர். சின்ன வயதிலேயே வாழ்க்கையில் பல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தவர். அதனால் இப்போதும் எது குறித்தும் ஒரு தெளிவான வாழ்க்கையில் இருப்பவர்.
நடிகர் சிவக்குமார் நடிப்பில் மட்டும் சிறந்த கலைஞர் அல்ல; அவர் மிகச்சிறந்த ஒரு ஓவியர். இலக்கிய வாசிப்பாளர். நிறைய நூல்களை படித்திருக்கிறார். எல்லாவற்றையும் விட சிறந்த நினைவாற்றல் மிக்கவர். 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயங்களை கூட இன்று நடந்தது போல, புள்ளிவிவரங்களுடன் சொல்லும் ஞாபகசக்தி கொண்டவர்.
ஆனால் சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவர் தன்னை உயர்வாக பேசி, எம்ஜிஆர் சிவாஜியை மட்டம் தட்டியதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது எம்ஜிஆர் இறக்கும்போது அவரது வயது 70. நடிகர் சிவாஜி கணேசன் இறக்கும்போது வயது 72. ஆனால் 80 வயதுகளை கடந்தும் சிவக்குமார், நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வருகிறார்.
எம்ஜிஆர், சிவாஜி 70 வயதுகளில் இறந்து விட்டனர். ஆனால் 80 வயது கடந்தும் நான் சின்னப்பையன் போல இருக்கிறேன். அதற்கு காரணம் 67 வருஷமாக டீ. காப்பி குடிப்பதில்லை. சிகரட், தண்ணி கிடையாது. பிற பெண்கள் தொடர்பு இல்லை. ஒழுக்கமாக வாழ்ந்தால் நல்லா வாழலாம். என்று சிவக்குமார் சமீபத்தில் நேர்காணலில் பேசியிருக்கிறார். எம்ஜிஆர் பல பெண்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடி்ததவர். சிவாஜிக்கு மது, புகைப்பழக்கம் இருந்தது. அதை சுட்டிக்காட்டி, அவர்களை சிவக்குமார் மட்டம் தட்டி பேசியதாக இப்போது சர்ச்சை எழுந்துள்ளது.





