நடிகர் அஜீத்குமார் நடித்த வாலி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்ஜே சூர்யா. பிறகு நடிகர் விஜய் நடித்த குஷி படத்தை இயக்கினார். இரண்டு படங்களே மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தொடர்ந்து சில படங்களை இயக்கிய எஸ்ஜே சூர்யா பிறகு நடிகராகவும் மாறினார். பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
சமீபகாலமாக நடிப்பு அரக்கன் என்ற அடையாளத்தோடு நடிகர் எஸ்ஜே சூர்யா பல படங்களில் வில்லன் கேரக்டர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஸ்பைடர் மெர்சல் மாநாடு மார்க் ஆண்டனி இந்தியன் 2 கேம் சேஞ்சர் ராயன் வீரதீர சூரன் என பல படங்களில் அவரது வில்லன் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாள படங்களிலும் எஸ்ஜே நடித்துக்கொண்டு இருக்கிறார்.
அடுத்து வெளிவர உள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி சர்தார் 2 உள்ளிட்ட படங்களில் எஸ் ஜே சூர்யா நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் கடந்த 2024ம் ஆண்டு வெளியான படம் சரிபோதா சனிவாரம். இந்த படத்தில் நானி நாயகனாகவும் எஸ்ஜே சூர்யா வில்லனாகவும் நடித்திருந்தனர். ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்திருந்தார்.
வில்லன் கேரக்டரில் எஸ்ஜே சூர்யா நடிப்பு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய பாராட்டை பெற்றது. இந்த படத்தில் வில்லனாக நடித்த நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யாவுக்கு தெலுங்கானா அரசு சிறந்த துணை நடிகர் விருது வழங்கியது. இதையடுத்து எஸ்ஜே சூர்யாவிற்கு நடிகர் நானி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வாழ்த்து செய்தி பதிவிட்டு இருந்தார்.
அந்த பதிவில், வாழ்த்துகள் சார். இந்த படத்தில் நீங்கள் சிறந்த துணை நடிகர் மட்டுமல்ல, எல்லாமே நீங்கள்தான். இந்த விருதை பெறுவதற்கு முழு தகுதி பெற்றவர் என்று அந்த பதிவில் நடிகர் நானி கூறியிருந்தார். ஆனால் அதற்கு எஸ் ஜே சூர்யா, மிக்க நன்றி நானி சார் என்று மட்டும் பதில் தந்திருந்தார். அந்தப் பதிவு முழுமையாக இல்லை என்று நினைத்த நடிகர் எஸ் ஜே சூர்யா மீண்டும் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் எஸ் ஜே சூர்யா கூறியிருப்பதாவது, மன்னிக்கவும் நானி சார். படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் உங்கள் பாராட்டு செய்திக்கு என்னால் உரிய பதிலை அளிக்க இயலவில்லை. காரணம் நன்றி என்று சொல்வது மட்டும் போதாது. நீங்களும் இயக்குனர் விவேக்கும் எனக்கு முழு ஆதரவாக இருந்தீர்கள். நீங்கள் இல்லாமல் இந்த பயணம் சாத்தியமில்லை. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. நீங்கள் திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருக்கிறீர்கள் என்று அந்த பதிவில் எஸ் ஜே சூர்யா கூறியிருக்கிறார்.





