பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற 10ம் தேதி இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த சர்தார் 2 படம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா ஆஷிகா ரங்கநாத் மாளவிகா மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.
தொடர்ந்து தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் கார்த்தி. ஆனால் கடைசியாக அவர் நடித்த ஜப்பான் மெய்யழகன் வா வாத்தியார் ஆகிய 3 படங்களும் வெற்றி பெறவில்லை. விமர்சன ரீதியாக ரசிகர்களை கவர்ந்த போதிலும் மெய்யழகன் படம் வணிகரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
அதே போல் ஜப்பான் மற்றும் வா வாத்தியார் ஆகிய இரண்டு படங்களுமே மிக மோசமான தோல்வி படங்களாக நடிகர் கார்த்திக்கு அமைந்துவிட்டன. அதனால் சர்தார் 2 படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் சர்தார் 2 படக்குழுவினர் தொடர்ந்து பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பல இடங்களில் சர்தார் 2 படக்குழு நேரில் சென்று பிரமோஷன் செய்த நிலையில் தற்போது தெலுங்கிலும் இந்த படத்துக்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு பங்கேற்று வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் நடந்த சர்தார் 2 பட பிரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்ஜே சூர்யா பேசியதாவது, தோழா படத்தில் கார்த்தியும் நாகார்ஜூனாகவும் சேர்ந்து நடித்திருந்தார்கள்.
அந்த படத்தின் சூட்டிங்கின் போது ஒரு சம்பவம் நடந்தது. அதை நான் இங்கே சொல்ல விரும்புகிறேன். அதாவது தோழா படத்தின் சூட்டிங் இடைவேளையில் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் 30 நிமிடங்கள் கார்த்தி சைக்கிள் ஓட்டுவது வழக்கமான ஒன்று. அந்த ஸ்டுடியோ நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான ஸ்டுடியோ என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி கார்த்தி சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தபோது அங்கே இருந்த வேகத்தடைகளால் அவரது கவனம் சிதறி இருக்கிறது.
இதுகுறித்த தகவல் நடிகர் நாகார்ஜூனா காதுகளுக்கு சென்று இருக்கிறது. உடனே அவர் அங்கே போடப்பட்டிருந்த வேகத்தடை எல்லாம் உடனே அகற்றி விட்டார். அவர்கள் இரண்டு பேருக்கும் இடையே எவ்வளவு தூரம் அன்பும் நெருக்கமான பிணைப்பும் இருக்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்று நடிகர் எஸ் ஜே சூர்யா அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.





