நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சூர்யா ஆரம்பத்தில் இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட் கொண்ட கதையிலேயே நடித்து வந்தார். இப்படி இருக்க விக்ரமனின் உன்னை நினைத்து திரைப்படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கௌதம் மேனன் மற்றும் பாலா திரைப்படங்களில் நடித்து உச்சத்திற்கு சென்றார் சூர்யா.
அவர் கடைசியாக விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் அவர் ஏற்றுக்கொண்ட ரோலக்ஸ் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. கிளைமாக்ஸில் வெறும் பத்தே பத்து நிமிடங்கள் மட்டும்தான் சூர்யா வருவார். ஆனால் அதன் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருந்தது.
ரசிகர்கள் பலரும் தன்னை ரோலக்ஸ் கதாபாத்திரமாக நினைத்து ரீல்ஸ் வெளியிட்டனர். இந்த நிலையில் தற்போது கங்குவா திரைப்படத்தில் சூர்யா நடித்து முடித்து இருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மட்டும் ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்றது. பூர்வ ஜென்மத்திற்கும் தற்போது இருக்கும் உள்ள தொடர்புதான் இந்த படத்தின் ஒற்றை கதைக்களம்.
அதை அடிப்படையாகக் கொண்டு மிகவும் பிரம்மாண்டமான செலவில் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யூ வி கிரியேஷன்ஸ் நிறுவனம் எடுத்து இருக்கிறது. மொத்தம் பத்து மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார். அக்டோபர் 10 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து தனது 44-வது திரைப்படத்திற்காக கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து இருக்கிறார் சூர்யா. இதில் பூஜா ஹெக்டே, கருணாகரன், பிஜுமேனன் உள்பட ஏராளமானோர் நடித்து வருகின்றனர். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்றது. இந்த நிலையில் சூர்யா வரும் 23ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதற்கான ஏற்பாடுகளில் அவரது ரசிகர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த பிறந்தநாளின் போது அவரது ரசிகர்கள் ரத்த தானம் செய்தனர். அப்போது சூர்யாவும் அடுத்த முறை தான் கண்டிப்பாக குருதி தானம் செய்வேன் என்று கூறினார். அதன்படி இன்று ரசிகர்களுடன் இணைந்து அவர் ரத்த தானம் செய்தார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.





