வெள்ளிதிரையைப் போன்றே சின்னத்திரைக்கும் எப்போதும் ஒரு மவுசு எங்கு இருக்கத்தான் செய்கிறது. காலை முதல் இரவு வரை ஒவ்வொரு சேனல்களிலும் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கு இங்கு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இது இன்றோ நேற்று ஆரம்பித்தது அல்ல. தொலைக்காட்சி பெட்டி ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்ற போதே, அங்கு சீரியல்களும் முளைக்க ஆரம்பித்து விட்டன.
இதில் ரசிகர்கள் கொண்டாடிய சீரியல்கள் என்று ஏராளமானது உள்ளன. முக்கியமாக சித்தி சீரியலை கூறலாம். 2000 ஆண்டுகளில் ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. ராதிகா நடிப்பில் வெளியான இந்த சீரியலை இப்போது, தமிழ் சினிமாவில் பிஸியாக இருக்கும் சமுத்திரக்கனி தான் இயக்கியிருந்தார்.
சித்தி சீரியல் மட்டுமல்ல அவரது நடிப்பில் அண்ணாமலை, செல்வி, வாணி ராணி போன்ற சீரியல்களும் ஹிட் அடித்தன. இதுபோக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட சீரியல்கள் என்று ஏராளமானவற்றை தடுக்கலாம். கோலங்கள், ஆனந்தம், வாழ்க்கை, நிம்மதி உங்கள் சாய்ஸ் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
இருப்பினும் சீரியலில் அடுத்த பாய்ச்சலை கொடுத்தது, மெட்டிஒலி. திருமுருகன் இயக்கத்தில் வெளியான இந்த சீரியல், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் பிறகு அவர் எடுத்த நாதஸ்வரம் சீரியலும் களைகட்டியது. திருமுருகனைப் போன்று திருச்செல்வமும் சீரியல்கள் எடுப்பதில் கெட்டிக்காரராக இருந்தார்.
கோலங்கள் சீரியலை எடுத்த அவர், நீண்ட இடைவேளைக்குப் பிறகு எதிர்நீச்சல் சீரியலை உருவாக்கினார். இந்த சீரியல் பலரது மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. சமூகத்தில் பெண்களை அவலப்படுத்தும் ஆண்கள் குறித்த பார்வையை தோலுரித்துக் காட்டியது இந்த சீரியல். இதில் குணசேகரனாக நடித்திருந்த மாரிமுத்து, தனது உடல் மொழியின் மூலம் பட்டையை கிளப்பினார்.
மாரடைப்பால் அவர் உயிரிழந்த நிலையில், அவரது கேரக்டருக்கு வில்லன் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்தார். ஆனால் அவரை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. உச்சத்தில் இருந்த சீரியல் கொஞ்சம் கொஞ்சமாக ரேட்டிங்கை இழந்தது. இதனால் சீரியலை முடிவுக்கு கொண்டு வந்தார் இயக்குனர் திருச்செல்வம். இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நான் ஏன் நடித்தேன் என்று தெரியவில்லை. மக்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை அவமானமாக பார்க்கிறேன் என்று வேலராமமூர்த்தி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.





