நடப்பாண்டின் துவக்கத்தில் இருந்தே, தமிழ் சினிமாவில் ரிலீஸ் ஆன 100க்கும் மேற்பட்ட படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. அதிகளவில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட லால் சலாம், கேப்டன் மில்லர், அயலான், சிங்கப்பூர் சலூன், ஸ்டார், ரத்னம் என பல படங்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தன. இதனால் 4 மாதங்களுக்கு மேலாக தமிழ் சினிமா ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர்.
அதே வேளையில் இந்த 4 மாத காலகட்டத்தில் வெளியான மலையாள படங்கள் தமிழ்நாட்டில் வசூலில் சக்கைப் போட்டன. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் பெற்றன. பிரேமலு, பிரம்மயுகம், மஞ்சும்மெல் பாய்ஸ், ஆடுஜீவிதம், ஆவேசம் என தொடர்ந்து மலையாள படங்கள் ஹவுஸ்புல் காட்சிகளாக தியேட்டர்களில் ரசிகர் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இப்படியே மலையாள படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், விஜய் நடித்த கில்லி ரி ரிலீஸ் செய்யப்பட்டது. விஜய், திரிஷா நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டாட்டமான வரவேற்பை பெற்ற இந்த படம், மீண்டும் ரசிகர்களின் அமோக வரவேற்பில் ரூ. 25 கோடிக்கு மேல் வசூலித்தது. ரசிகர்களிடம் அபரிமிதமான கொண்டாட்டங்களை தியேட்டர்களில் காண முடிந்தது.
அதன்பிறகு சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 படம் ரிலீஸ் செய்யப்பட்டது, தமன்னா, ராஷிக்கண்ணா கவர்ச்சி நடிப்பில் இந்த திகில் படம், மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலில் சாதித்து, தமிழ் சினிமா எப்போதும் முதலிடம் பிடிக்கும் என்பதை நிரூபித்துக் காட்டியது. பேய் படமாக இருந்தாலும், ரசிகர்கள் கொண்டாடி இந்த படத்தை மாஸ் ஹிட் படமாக வெற்றி பெறச் செய்தனர்.
இதையடுத்து கடந்த 30ம் தேதி துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்த கருடன் படம் வெளியானது. விடுதலை படத்தை போலவே இந்த படத்திலும் சூரிக்கு ரசிகர்களிடம் அமோகமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த படம் கடந்த 2 வாரங்களில் மிகப்பெரிய அளவில் ரூ. 37 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலில் சாதனை புரிந்திருக்கிறது.
இதைத்தொடர்ந்து நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நேற்று, நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அவரது 50வது படம் மகாராஜா ரிலீஸ் ஆனது. பார்பர் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படம் முதல் நாளிலேயே ரூ. 7 கோடி வரை வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் 1915 ஸ்கிரீன்களில் ரிலிஸ் ஆகியுள்ள மகாராஜா படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனமும், வரவேற்பும் கிடைத்துள்ளது. அதனால் மகாராஜா படமும், அரண்மனை 4, கருடன் பட வரிசையில் வெற்றிப் படமாக இடம்பிடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.





