தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உச்சத்தில் இருப்பவர் நடிகர் விஜய். இப்போது ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துடன் நடிப்புக்கு குட்பை சொல்லும் நடிகர் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள அவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து எதிர்மறை கருத்துகள் இருந்தாலும் தொடர்ந்து திமுக அதிமுக என இரண்டு திராவிட கட்சிகள் மட்டுமே மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்த நிலையில், புதிய மாற்றமாக நடிகர் விஜய் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்ற கருத்தையும் பலர் கூறி வருகின்றனர்.
தெற்கு காஷ்மீரில் உள்ள பகல்ஹாமில் நேற்று செவ்வாய்க்கிழமையன்று தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பலர் படுமோசமாக காயமடைந்துள்ளனர். சுற்றுலா சென்ற மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாதிகளின் இந்த வன்முறை தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி பேசியுள்ளார். இது குறித்த அனைத்து அடிப்படை பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு பாதுகாப்பு படையினருடன் முக்கிய கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சர் ஸ்ரீநகர் வந்துள்ளார்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் குறித்து தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ஜம்மு காஷ்மீர் பகல்ஹானில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சகோதரர்கள் உள்ளிட்ட அப்பாவிகளின் உயிர்கள் பறிபோய் இருக்கின்றன. இந்த கோழைத்தனமான மற்றும் இழிவான வன்முறை செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று நடிகர் விஜய் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.





