சினிமா நடிகர்களில் பலர், நடிப்பது மட்டுமின்றி வாழ்க்கை பற்றி புரிதலிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கின்றனர். படத்தில், காமெடியாக, வில்லனாக நடிக்கும் சில நடிகர்கள், நிஜத்தில் முதிர்ச்சி பெற்றவர்களாக, நல்ல சிந்தனையாளர்களாக இருப்பார்கள். அவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசும்போதுதான், அவர்களது சிறந்த குணாதசியங்கள் தெரிய வரும்.
இன்று, ஒரு நேர்காணலில் நடிகர் விக்ரம் பிரபு பேசி இருந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன், இளையதிலகம் பிரபு மகன் என்ற அடையாளங்கள் இருந்தும், ஒரு புதுமுக நடிகர் போன்ற இயல்பிலேயே அவர் காணப்படுகிறார். பொது இடங்களில், படப்பிடிப்பு தளங்களில் நடந்துக்கொள்வதாக, தமிழ் சினிமா சார்ந்த பலரும் கூறி வருகின்றனர்.
இன்று நடிகை ஸ்ரத்தா உடன் ஒரு நேர்காணல் பங்கேற்ற விக்ரம் பிரபு, சில விஷயங்களை படம் சார்ந்தும், தனது பொதுவான கருத்தாகவும் பகிர்ந்துக்கொண்டார். இளம் வயது நாயகனாக இருந்தும் வாழ்க்கையை பற்றிய அவரது ஆழ்ந்த சிந்தனைகளே அதில் வெளிப்பட்டது.
திருமணத்தை பொருத்த வரை, புரிதல் உள்ள இருவரால் மட்டுமே அங்கு சேர்ந்து வாழ முடியும். எப்படியும் கருத்து வேறுபாடு இருவருக்கும் ஏற்பட்டே தீரும் என்பது உண்மை. அந்த நேரங்களில் நீ என்னை புரிந்துக்கொள்ளவில்லையே என்ற தனிப்பட்ட ஈகோ தான் ஒவ்வொரு முறையும் கணவன், மனைவிக்குள் எழும். தீப்பொறியாக தோன்றும் அந்த ஈகோ தான், நாளடைவில் அது பல பிரச்னைகளால் வளர்ந்து வளர்ந்து குடும்பத்தையே பிரிக்கும் பெரிய தீப்பிழம்பாக மாறுகிறது.
வாழ்க்கையில் நெகடிவ்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. பாசிடிவ் விஷயங்களை உடனடியாக மறந்து விடுகிறோம். அதாவது துன்பம் தந்த விஷயங்களை அடிக்கடி நினைத்து பார்க்கிறோம். சந்தோஷம் தந்த விஷயங்களை, அந்த நேரத்தோடு மறந்துவிடுகிறோம். அந்த சந்தோஷ நிகழ்வுகளை மீண்டும் நினைத்து பார்ப்பதே இல்லை.
நம் சமுதாயத்தில் இப்படியும் ஒரு எண்ணம் உள்ளது. அதிகமாக சந்தோஷப்பட்டாலோ, சிரித்தாலோ அடுத்து பெரிய துன்பம் வந்து விடும். சிரித்ததற்கு பதிலாக அழ வேண்டியது வரும். இப்படியே நெகடிவ் விஷயங்களுக்கு முக்கியத்துவம் தந்து, பாசிட்டிவ் விஷயங்களை தவிர்த்து விடுகிறோம், என்று கூறி இருக்கிறார் நடிகர் விக்ரம் பிரபு.





