தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு. தொடர்ந்து பல படங்களில் காமெடி ரோலில் பிஸியாக நடித்து வருகிறார். காமெடி நடிகர்களாக இருந்த சந்தானம் சூரி சதீஷ் போன்றவர்கள் ஹீரோ நடிகர்களாக மாறிவிட்டதால் யோகிபாபு இப்போது பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
கடவுள் பக்தி அதிகம் கொண்டவர் யோகிபாபு. அடிக்கடி திருத்தணி திருச்செந்தூர் என முருகன் கோவில்களுக்கு செல்லும் பழக்கம் கொண்டவர். யோகிபாபு காமெடி சிரிப்பே வரவழைப்பதில்லை என்ற விமர்சனம் இருந்தாலும் அவர் தொடர்ந்து படங்களில் காமெடி ரோல்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்.
குறிப்பாக மண்டேலா என்ற படத்தில் நடிகர் யோகிபாபு நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை கவனத்தை பெற்றது. இந்த படத்தில் மரத்தடியில் சலூன் கடை நடத்தும் பார்பர் கேரக்டரில் அவர் நடித்திருந்தார். பஞ்சாயத்து தேர்தலை மையப்படுத்திய இந்த கதை மண்டேலா என்ற கேரக்டரில் யோகிபாபு நடிப்பு மிகவும் அழுத்தமாக இருந்தது.
இப்போது குட் பேட் அக்லி ராஜா சாப் மெடிக்கல் மிராகிள் உள்ளிட்ட படங்களில் யோகிபாபு நடித்து வருகிறார். நடிகர் யோகிபாபு காமெடி ரோல், அவ்வப்போது தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள கதையின் நாயகன் கேரக்டரிலும் தேர்வு செய்து நடிக்கிறார். ஒரு படத்தில் நடிக்க அவர் 3 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை நடிகர் யோகிபாபு சென்னையில் இருந்து பெங்களூரு செல்வதற்காக அதிகாலை 3 மணியளவில் காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார். வாலாஜா பேட்டை சுங்கச்சாவடி அருகே யோகிபாபு கார் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், ரோட்டுக்கு நடுவில் இருந்த தடுப்பு சுவர்கள் மீது வேகமாக மோதியது. காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது.
ஆனால் காருக்குள் இருந்த நடிகர் யோகிபாபுவுக்கு அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. அதன்பிறகு வேறு ஒரு கார் அங்கு வரவழைக்கப்பட்டு அந்த காரில் நடிகர் யோகிபாபு ஏறிச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை, நான் நலமாக இருக்கிறேன், இது வதந்தி என்று நடிகர் யோகிபாபு பதிவு ஒன்றின் மூலம் தெளிவுபடுத்தி உள்ளார்.





