நடிகர் விஜய் கடந்த 3 வாரங்களாக மாவட்டம் வாரியாக சனிக்கிழமை தோறும் மக்கள் சந்திப்பு பயண கூட்டங்களை நடத்தி வருகிறார். கடந்த 27ம் தேதி சனிக்கிழமையன்று நாமக்கல் மற்றும் கரூரில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். இரவில் கரூரில் அவர் பிரசாரம் செய்த போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்த டிராகன் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்த கயாடு லோஹர் பெயரில் ஒரு எக்ஸ் பதிவு வெளியானது. அந்த பதிவில், கரூரில் நடந்த துயர சம்பவத்தில் எனது நண்பரை இழந்துவிட்டேன். அனைத்தும் தவெகவின் சுயநல அரசியலுக்காக. உங்கள் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள் விஜய்? என்று அதில் நடிகை கயாடு லோஹர் பதிவிட்டதாக இணையத்தில் ஒரு போஸ்ட் வைரலானது.
இதுதொடர்பான அவரது புகைப்படங்களும் வேகமாக இணையத்தில் வேகமாக பரவியது. இது பெரிய அளவில் தமிழ் சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போல் நடிகை ஓவியாவும் அரஸ்ட் விஜய் என ஒரு பதிவை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்ட பிறகு அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த பதிவை டெலீட் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நடிகை கயாடு லோஹர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, எனது பெயரில் பரவும் எக்ஸ் தள கணக்கு போலியானது. எனக்கும் அதற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. மேலும் அங்கு வெளியிடப்பட்ட அறிக்கைகளும் என்னுடையது அல்ல. கரூர் கூட்டத்தில் நடந்த துயர சம்பவத்தால் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன். மேலும் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இருப்பினும் கரூரில் எனக்கு தனிப்பட்ட நண்பர்கள் யாரும் இல்லை என்பதையும் என் பெயரில் பரப்பப்படும் தகவல் தவறானது என்றும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தயவுசெய்து இந்த தவறான தகவலை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம். மீண்டும் ஒருமுறை துக்கத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு எனது பிரார்த்தனைகள் என்று கயாடு லோஹர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் டிராகன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு முன்னணி நடிகையாக வலம் வருபவர் கயாடு லோஹர். இப்போது அவரது பெயரில் விஜய் குறித்த பதிவு வைரல் ஆனது. அது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதால் இந்த விளக்கத்தினை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் உடனடியாக வெளியிட்டுள்ளார். இதுபோல் இணையத்தில் பொய் கணக்குகளை துவங்கி சிலர் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரவ விடுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.





