இந்த வருடம் வெளியாக இருக்கும் திரைப்படங்களில் மிக முக்கியமான படம் அஜித் குமாரின் விடாமுயற்சி. படம் அறிவிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் இன்னும் சூட்டிங் நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டிலேயே இந்த திரைப்படத்தை மகிழ் திருமேனி எடுத்து வருகிறார். அங்கு படத்தை எடுப்பதற்கான காரணம் நீங்கள் பார்க்கும் போது தெரியவரும் என்று ஏற்கனவே அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியிருந்தார்.
படத்திற்கான கதை அம்சத்திற்கும், அடுத்த கட்ட காட்சிகளுக்கும் அஜர்பைஜான் நாடே சரியாக இருந்ததால் அங்கு சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, இடையே சில நாட்கள் தள்ளி வைக்கப்பட்டு மீண்டும் நடைபெற்று வருகிறது. லைக்கா நிறுவனம் தான் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது.
அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் திரிஷா இருக்கும் நிலையில் அவருக்கு அஜித்தின் மனைவி கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. இதுபோக அர்ஜுன் மற்றும் ஆரவ் என இருவரும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தில் நடிகை ரெஜினா இருப்பது உறுதியாக இருக்கும் நிலையில், மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
கிட்டத்தட்ட 80 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு இருப்பதாக மட்டும் கூறப்படுகிறது. அஜர்பைஜான் நாட்டில் சூட்டிங் முடித்து விட்ட பிறகு, ஹைதராபாத் அல்லது புனேவில் சில காட்சிகளை எடுக்க திட்டமிட்டு இருக்கிறாராம் மகிழ்திருமேனி. மேலும் பேட்ச் ஒர்க் பணிகளும் அங்கு தான் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
அதாவது காணாமல் போகும் தனது மனைவியை, கணவன் தேடி கண்டுபிடிப்பது தான் இந்த திரைப்படத்தின் ஒற்றை கதை என்று கூறப்படுகிறது. ரேஸி ஆக்சன் த்ரில்லராக இந்த திரைப்படம் உருவாக இருப்பதாகவும் சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் முதல் போஸ்டரை இரண்டு வாரங்களுக்கு முன்பு லைக்கா நிறுவனம் வெளியிட்டது.
ஆனால் அந்த போஸ்டர் மிகவும் சாதாரணமாக இருப்பதாக அஜித் ரசிகர்கள் கூறினர். தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. மூன்று போஸ்டர்களிலும் அஜித் ஒரே டிரெஸ்ஸை அணிந்திருப்பதாக அஜித் ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள். இதனால் படம் ஒரே நாளில் நடைபெறும் கதையாக இருக்கலாம் என்று அவர்கள் யூகித்துள்ளனர். அடடே இத நாங்க நோட் பண்ணவே இல்லையேப்பா என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.





