நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் ஒரே வாரத்தில் 1000 கோடி ரூபாய் வசூலை கடந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் இன்னும் ஒரு வாரம், 10 நாட்களுக்குள் 2000 கோடி ரூபாய் வசூலை அள்ளிவிடும் என்று பலரும் கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு படத்தில் மாஸ் காட்டி நடித்திருக்கிறார் அல்லு அர்ஜூன்.
தமிழ் சினிமாவில் 100 கோடி ரூபாய் வசூலை தொடுவதே தமிழ்பட ஹீரோக்களுக்கு பெரிய போராட்டமாக இருக்கிறது. இந்த ஆண்டில் 250 படங்களுக்கு மேல் தமிழ் படங்கள் வெளியான நிலையில் இதுவரை 9 படங்கள் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூல் சாதனையை செய்திருக்கின்றன.
இதில் விஜய் நடித்த தி கோட் ரூ. 455 கோடி, சிவகார்த்திகேயன் நடித்த அமரன் ரூ. 325 கோடி, ரஜினி நடித்த வேட்டையன் ரூ. 250 கோடி என அதிக வசூல் செய்திருக்கிறது. மற்ற படங்கள் எல்லாம் 200 கோடி ரூபாய் வசூலை கூட தொட முடியவில்லை. அதிலும் சூர்யா நடித்த கங்குவா ரூ. 2000 கோடி வசூலிக்கும் என்றனர். ஆனால் ரூ. 200 கோடி வசூலை கூட கங்குவா தொடவில்லை.
ஆனால் புஷ்பா 2 படம் ஒரு வாரத்தில் 1000 கோடி ரூபாய் என்ற அசகாய சாதனையை புரிந்திருக்கிறது. தெலுங்கு படங்களான பாகுபலி, ஆர்ஆர்ஆர், கல்கி 2898ஏடி தேவரா என வசூலில் தொடர்ந்து சாதித்து வருகின்றன. அந்த வரிசையில் இப்போது புஷ்பா ரூ. 2000 கோடி வசூலித்தால் அது இமாலய சாதனையாக இந்திய சினிமாவில் பெருமை பெற்றுவிடும்.
புஷ்பா 2 படத்துக்கு பிறகு புஷ்பா 3 படம் உருவாக இருக்கிறது. ஆனால் அதற்கான படப்பிடிப்பை இப்போதைக்கு துவங்க வாய்ப்பில்லை. இன்னும் சில ஆண்டுகள் கழித்து புஷ்பா 3 படத்தை எடுக்க இயக்குனர் சுகுமாரன், நடிகர் அல்லு அர்ஜூன் முடிவு செய்திருக்கின்றனர்.
புஷ்பா 2 அபார வெற்றிக்கு பிறகு, அல்லு அர்ஜூன் தனது அடுத்த படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இயக்குனர் திரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க உள்ளனர். தெலுங்கில் முன்னணி இயக்குனரான திரிவிக்ரம் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். இந்த படம் குறித்த அறிவிப்பு வரும் ஜனவரியில் வெளியாகிறது. படப்பிடிப்பை மார்ச் மாதம் துவங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.





