விஜய் டிவி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த 2017ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. இப்போது 2024ம் ஆண்டில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் அக்டோபரில் துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன.
கடந்த 2017ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் துவங்கியது முதல் கடந்த சீசன் 7 வரை இந்த நிகழ்ச்சியை 7 ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வந்தவர் நடிகர் கமல்ஹாசன். உண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாபெரும் வெற்றிக்கு பெரிய பலமாக இருந்தவர் நடிகர் கமல்ஹாசன்தான் என்றால் அது மிகையல்ல.
ஏனெனில் அந்த நிகழ்ச்சிக்கு வரும் போட்டியாளர்களை தெளிவாக புரிந்துக்கொண்டு அவர்களை கண்டிக்க விதத்தில் கண்டித்தும், பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டியும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரு சீரான பாதையில், ஒழுங்கான முறையில் பயணிக்க செய்தவர் தொகுப்பாளர் கமல்ஹாசன் என்றால் அது மாபெரும் உண்மை என்பதை பார்வையாளர்கள் ஆமோதிப்பார்கள்.
ஆனால் இந்த முறை பிக்பாஸ் 8 சீசன் நிகழ்ச்சிகளில் வரப்போவது தொகுப்பாளர் கமல்ஹாசன் அல்ல. மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதிதான் இந்த சீசன் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். சில தினங்களுக்கு முன் பாண்டிச்சேரியில் நடந்த பிக்பாஸ் சீசன் 8 பிரமோ நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பிலும் பங்கேற்றிருக்கிறார்.
அதனால் இந்த ஆண்டில் வரப் போகும் பிக்பாஸ் போட்டியாளர்களை கண்டித்தும், தண்டித்தும், அறிவுரை சொல்லியும் வழிநடத்தும் பொறுப்பு மிக்க பணியை நடிகர் விஜய் சேதுபதி தான் ஏற்றுள்ளார். நடிகர் கமல்ஹாசனை போலவே நடிப்புத்துறையில் நிறைய அனுபவங்களும், பாடங்களும் கற்றவர் விஜய் சேதுபதி என்பதால் அவரது தொகுப்பு பணி சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாக பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண், மாகாபா, நடிகர் ரஞ்சித், நடிகர் ரியாஸ்கான், தயாரிப்பாளர் ரவீந்திரன், டிடிஎப் வாசன் உள்ளிட்டோர் வர இருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் பல சண்டக்கோழிகளை களத்தில் இறக்கி விட விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இவர்களை எப்படி விஜய் சேதுபதி சமாளிக்கப் போகிறார் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக, சந்தேகமாக பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.





