மாரி செல்வராஜ் இதுவரை 3 படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார். அந்த 3 படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை, கவனத்தை பெற்றிருக்கின்றன. ஒடுக்கப்பட்ட சமுதாயம், ஜாதியம், அடக்குமுறை குறித்து அவர் தனது படங்களில் பேசுவது, இன்றைய காலகட்டத்துக்கு சரியானது அல்ல என்ற விமர்சனம் இருந்தாலும், அந்த படங்களும் ஓடுகின்றன.
முதல் படமாக பரியேறும் பெருமாள், அடுத்தது 2வது படமாக கர்ணன், 3வது மாமன்னன் ஆகிய 3 படங்களை இயக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். இதில் பரியேறும் பெருமாள் படத்தில் கதிர் ஹீரோவாக நடித்திருந்தார். கர்ணன் படத்தில் தனுஷ் நடித்திருந்தார். மாமன்னன் படத்தில் உதயநிதி நடித்திருந்தாலும் அந்த படத்தை பொருத்தவரை வடிவேலுதான் ஹீரோவாக பார்க்கப்பட்டார்.
மாமன்னன் படத்தில், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாமன்னன் (வடிவேலு) தனித்தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். இருந்தாலும் பகத்சிங் தான் உண்மையான எம்எல்ஏவாக அங்கு இருக்கிறார். அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டவராக செயல்படும் வடிவேலு, ஒரு கட்டத்தில் மகன் உதயநிதிக்கு ஆதரவாக, பகத் சிங்கை எதிர்ப்பதுதான் மாமன்னன் படத்தில் கதை. இறுதியில் சபாநாயகராக சட்டசபையில் வந்து அமர்வதே இந்த படத்தில் ஹைலைட்
இது முன்னாள் சபாநாயகர், இப்போதைய திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதி எம்எல்ஏ தனபால் வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது என படம் வெளியான போதே பரபரப்பாக கூறப்பட்டது. ஏனெனில் அதிமுகவினர், அவரது வீட்டில் சாப்பிட மறுத்ததால் அதையறிந்த ஜெயலலிதாவே, தனபாலுக்கு சபாநாயகர் பதவி கொடுத்து, அமைச்சர் முதல் எம்எல்ஏ வரை அனைவரும் அவரிடம் கேட்டுவிட்டுதான் சபையில் பேச வேண்டும் என்று ஜெயலலிதாவே அப்படி செய்ததாக கூறப்படுகிறது.
மாமன்னன் படத்தில் வடிவேலு அந்த கேரக்டரில் நடித்திருந்தாலும் முதலில் அந்த கேரக்டரில் நடிக்க இருந்தவர் பற்றிய தகவல் இப்போது வெளிவந்துள்ளது. அதன்படி காமெடி நடிகர் சார்லி தான் அந்த மாமன்னன் கேரக்டரில் நடிக்க முதலில் தேர்வானவர். ஆனால் அவர் நடிக்காத நிலையில், வடிவேலு பிறகு நடித்திருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் சார்லி கூறுகையில், ஒரு படத்தில் நடித்தால்தான் நல்ல பெயர் கிடைக்கும். ஆனால் இந்த படத்தில் நடிக்காமலேயே, பலரும் என்னை பாராட்டி வருகின்றனர். சார்லி நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என கமெண்ட் செய்திருக்கின்றனர். அந்த அன்புக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். நிறைய படங்கள் நான் நடிப்பதாக இருந்து வேறு நடிகர்களுக்கு சென்றிருக்கிறது. அதேபோல் மற்ற நடிகர்களின் ரோல்களும் எனக்கு வந்திருக்கிறது. இதில் எனக்கு உறுதியாகும் கேரக்டரில் மட்டுமே நான் நடிக்கிறேன், என சார்லி அதில் கூறியிருக்கிறார்.





