தமிழ் சினிமாவில் எப்போதுமே நல்ல கதைகளுக்கு தான் பஞ்சமாக இருக்கிறது. அதனால் நல்ல திரைக்கதை அம்சம் கொண்ட படங்கள் ஆண்டுக்கு ஒன்றிரண்டு வந்தாலேே அது பெரிய அளவில் வரவேற்பை பெற்று விடுகின்றன. அதே போல் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
நாகேஷ் சந்திரபாபு சோ தேங்காய் சீனிவாசன் சுருளிராஜன் டணால் தங்கவேலு போன்ற காமெடி நடிகர்களுக்கு பிறகு ஒய்ஜி மகேந்திரா கவுண்டமணி செந்தில் வடிவேலு விவேக் சந்தானம் கருணாஸ் சூரி என காமெடி நடிகர்களின் வருகையால் தமிழ் சினிமாவில் காமெடி பெரிய அளவில் ரசிகர்களை ரசிக்க வைத்தது. அது ஒரு பொற்காலம் என்றுகூட சொல்லலாம்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சந்தானம் சூரி போன்றவர்களும் ஹீரோவாக நடிக்க போன பிறகு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காமெடி நடிகர் யாருமே தென்படவில்லை. அதனால் இப்போதைக்கு ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பதை போல சிரிப்பையே வரவழைக்காத யோகிபாபுவை வைத்து காமெடி என்ற பெயரில் ஒப்பேத்தி கொண்டிருப்பதாக சினிமா ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.
நடிகர் யோகிபாபுவின் சுருட்டை முடி முகத்தோற்றம் கிண்டலான பேச்சு பாடி லாங்குவேஜ் என வித்யாசமாக இருந்தாலும் கவுண்டமணி செந்தில் வடிவேலு விவேக் போல அவரது காமெடி காட்சிகள் வாய்விட்டு சிரிக்க வைப்பது இல்லை. படத்தில் கதையுடன் ஒன்றி வரும் சில காட்சிகளில் அவரது கேரக்டர் லேசாக சிரிக்க வைத்தாலும் மற்றபடி அவரது காமெடி எல்லாம் பெயரளவில்தான் உள்ளது.
சமீபத்தில் நீயா நானா கோபிநாத் நேர்காணல் செய்த போது நடிகர் யோகிபாபு அவரிடம் கூறியதாவது, ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி அப்படி நான் பிஸியாக இருந்தேன். ஒரு அரை மணி நேரம் தூங்கின நாள் எல்லாம் இருக்குது. கார்லயே படுத்து தூங்கி இருக்கிறேன்.
ஒரு மாதிரி சைக்கோ போல சுத்தியிருக்கிறேன். அப்போ ஒரு நாளைக்கு 4 படம் பண்ணியிருக்கேன். இப்படி எல்லாம் இருந்திருக்கேன். டென்சனாகவே இருந்திருக்கேன். கடந்த 10 வருஷமா அது அப்படியே தான் இருக்குது. அந்த கவலை தான் எனக்கு. ஆனா இப்ப ரொம்பவும் கம்மி பண்ணிட்டேன். குடும்பத்துடன் வீட்டில் நேரத்தை செலவிட்டு வருகிறேன் என்று நடிகர் யோகிபாபு அதில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





