நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் மிக விரைவில் ரசிகர்களை சந்திக்க வருகிறார் இந்தியன் 2 படம் மூலமாக இந்தியன் தாத்தா. இந்த படத்தின் டிரெய்லர் நேற்று காலை பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது. நேற்றிரவு, மும்பையில் டிரெயிலர் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் கமல், ஷங்கர், சித்தார்த், அனிருத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தியன் படம், கடந்த 1996ம் ஆண்டில் வெளியானது. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்திருந்தார். அதில் சேனாபதி என்ற தாத்தா கேரக்டரிலும், சந்துரு என்ற மகன் கேரக்டரிலும் கமல் அட்டகாசமாக நடித்திருந்தார். இதில் இந்தியன் தாத்தா கேரக்டரின் சிறப்பாக நடிப்புக்கு, மத்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருது கிடைத்தது.
இந்த படத்தில் வரும் கதைப்படி, சேனாபதி கமல்ஹாசன் ( இந்தியன் தாத்தா) 1918ம் ஆண்டில் பிறந்தவர் என்று ஒரு காட்சியில் காட்டப்படுவார். 1996ம் ஆண்டில் இந்த படம் வௌியான நிலையில், அப்போதே கதைப்படி அந்த தாத்தா கமலுக்கு 78 வயது என்பது குறிப்பிடத்தக்கது. படத்திலும் மகன் சந்துரு கேரக்டரில் வரும் கமல் ஒரு காட்சியில், 80 வயது கிழம், இவரால் என்ன செய்ய முடியும் என்று கோபமாக பேசுவார்.
இப்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் அதே இந்தியன் தாத்தா கேரக்டரில் கமல்ஹாசன் பல கெட்டப்புகளில் இந்தியன் 2 படத்தில் நடித்திருக்கிறார். அப்படி என்றால் அப்போதே கமல் வயது 78 என்னும் பட்சத்தில், 28 ஆண்டுகள் கழித்துவரும் இந்தியன் 2 படத்தில் கமல் வயது 106 ஆக தானே இருக்க முடியும்? 106 வயதில் ஒரு முதியவர், இப்படி ஆக்சன் காட்சிகளில் சண்டை போட முடியுமா? என்று கிண்டலடித்து வருகின்றனர்.
அப்படி என்றால், இந்த படத்தில் நடித்திருப்பது இந்தியன் தாத்தாவா, அல்லது சந்துரு கேரக்டரில் வந்து இறந்து போனாரே கமல், அவர்தான் இந்த இந்தியன் 2 படத்தில், மீண்டும் தாத்தாவாக நடிக்க வந்திருக்கிறாரா, என்றும் கலாய்த்து வருகின்றனர். அப்படி என்றால் உண்மையான இந்தியன் தாத்தா 3ம் பாகத்தில்தான் வருவாரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால் இந்தியன் தாத்தா வயது குறித்த விமர்சனங்களும், சர்ச்சைகளும் எழுந்த நிலையில், அதற்கான சரியான பதிலை கமலும், ஷங்கரும் கூறாமல் தவிர்த்து வருகின்றனர். ஒருவேளை இந்தியன் 2 படமும் 1996ம் ஆண்டிலேயே நடக்கும் கதைதான் என்று சொல்லி சமாளித்தாலும், படத்தில் காட்டப்படும் சமூக வலைதளங்களின் பயன்பாடு இப்போதுதான் அதிகரித்துள்ளது. 1996ல் நடப்பது போல எடுக்கப்பட்டால், அவை எல்லாம் படத்தில் கொண்டு வரவே முடியாது. இப்போது இந்த விவகாரம், இந்தியன் 2 படத்துக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி, கடும் விமர்சனத்தில் சிக்கியுள்ளது.





