காக்க காக்க உள்ளிட்ட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் கூல் சுரேஷ். ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போக சுத்தமாக மறைந்தே போனார். பிறகு சிம்புவின் ரசிகர் என்ற அடையாளத்தோடு சில வீடியோக்களை சமூக வலைதளங்களில் போட ஆரம்பித்தார். அதன் பிறகு சிம்புவின் மாநாடு படத்தின் ப்ரோமோஷனிலிருந்து சோஷியல் மீடியாக்களிலும், யூட்யூப் சேனல்களிலும் பீக்கிற்கு சென்றார்.
சூழல் இப்படி இருக்க தொடர்ந்து வெளியான படங்களுக்கு வித்தியாசமான முறையில் வந்தும் பேசியும் சென்றார்.அதனையடுத்து படங்களின் நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைக்க ஆரம்பித்தனர். அவர் வந்து ஏடாகூடாமாகவோ இல்லை நகைச்சுவையாகவோ பேசினால் படத்துக்கு இலவச ப்ரோமோஷன் கிடைக்கும் என்ற நம்பிக்கை படக்குழுவுக்கு கிடைத்தது. அதனால் அவர் சந்திரமுகி 2 விழாவுக்குக்கூட அழைகக்ப்பட்டிருந்தார். மேலும் இந்த பிரபல்யத்தை யூஸ் செய்து படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற ஆரம்பித்திருக்கிறார்.
இந்த சூழலில் மன்சூர் அலிகான் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம் சரக்கு. அதனை ஜெயக்குமார் என்பவர் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அப்போது கூல் சுரேஷுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதனையடுத்து பேசிய கூல் சுரேஷ் எல்லோருக்கும் மாலை போட்டோம் நம்மை கான குயில் குரலில் வரவேற்ற தொகுப்பாளினிக்கு மாலை போட்டோமா என கேட்டு அருகில் இருந்த தொகுப்பாளினி கழுத்தில் மாலையை போட்டுவிட்டார்.
அவரது இந்த செயல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டார். அப்போது கூல் சுரேஷும் மன்னிப்பு கேட்டார். இருந்தாலும் அவரது இந்த செயல் பலரிடம் வலுவான எதிர்ப்பை சந்தித்திருக்கிறது. சமூக வலைதளங்களிலும் கண்டனங்கள் வலுத்துவருகின்றன.
இந்நிலையில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “சரக்கு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. எப்போதும் விளையாட்டுக்கு சில செயல்கள் செய்வது போன்று அந்த தொகுப்பாளினிக்கு மாலை போட்டேன். ஆனால் பெண்ணுக்கு மாலை போடக்கூடாது என்று பின்னர்தான் தெரியவந்தது. எனது வீட்டிலும், எனது நண்பர்களும் நீ செய்தது தப்பு என்று சொன்னார்கள். விளையாட்டுக்குத்தான் செய்தேன் விபரீதமாகிவிட்டது. மன்னித்துக்கொள்ளுங்கள். பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்.
நான் செய்ததற்கும் சரக்கு படக்குழுவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் இங்கு பதிவு செய்துகொள்கிறேன். இன்னொன்று உங்கள் எல்லோருக்குமே தெரியும் நான் படங்களில் நடித்து பெரிதாக வளரவில்லை.அதனையடுத்து மாநாடு, வெந்து தணிந்தது காடு, எஸ்டிஆர் என்று வேறு ரூட்டில் பேசி ஏதோ எனது பிழைப்புக்காக செய்துகொண்டிருக்கிறேன்.நீங்கள் இல்லாம்ல் நான் இல்லை. எது நடந்திருந்தாலும் மன்னித்துவிடுங்கள்” என்றார்.





