தமிழ் சினிமாவில் எப்போதுமே திகில், த்ரில் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த காலத்தில் மை டியர் லிசா, மை டியர் குட்டிச்சாத்தான், வா அருகில் வா, பேய் வீடு, கல்யாண ராமன், உருவம் என பல படங்கள் திகில் படங்களாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
இப்போதும் காஞ்சனா, அரண்மனை போன்ற வெற்றிப் படங்கள் தொடர்ச்சியாக காஞ்சனா 4, அரண்மனை 5 என வெளியாக காரணம், திகில் படங்களை இப்போதும் ரசிகர்கள் கொண்டாடி வரவேற்கின்றனர். டிமாண்டி காலனி படம் வெளியாகி 9 ஆண்டுகளுக்கு பின் சமீபத்தில் டிமாண்டி காலனி 2 வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படம் பிசாசு. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து பிசாசு படத்தின் 2ம் பாகத்தை டைரக்டர் மிஷ்கின் இயக்கியுள்ளார். நடிகை ஆண்ட்ரியா இந்த படத்தில் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளார். படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் பூர்ணா சந்தோஷ் பிரதாப் நமீதா கிருஷ்ணமூர்த்தி அஜ்மல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் சார்பில் முருகானந்தம் தயாரித்த இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன் பிசாசு 2 படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் வெளியாக உள்ளது.
பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இரண்டாம் குத்து படத்தின் விநியாகிய உரிமையை ராக்போர்ட் என்டர்டைமென்ட் நிறுவனம் ஒப்பந்தப்படி 4.85 கோடி ரூபாயில் ரூ. 2 கோடி பாக்கி வைத்திருந்தது. இந்த தொகையை திருப்பிக் கொடுக்காமல் குருதியாட்டம், மன்மத லீலை ஆகிய படங்களை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இந்த படங்களுக்கு தடை விதிக்க கோரியது. வழக்கை விசாரித்த கோர்ட், 1.17 கோடி ரூபாயும், ஜிஎஸ்டியாக 31 லட்சம் ரூபாய் வழங்கவும் ராக்போர்ட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.
கோர்ட் உத்தரவுப்படி பணத்தை வழங்காமல் ராக்போர்ட் நிறுவனம் பிசாசு 2 படத்தை தயாரித்து வெளியிட உள்ளதாக பிளையிங் ஹார்ஸ் பிக்சர் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. 1. 84 கோடி ரூபாய் செலுத்தும் வரை பிசாசு 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிசாசு 2 படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் நவம்பர் 18ம் தேதிக்குள் மனுவுக்கு பதில் அளிக்கும்படி ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ்க்காக காத்திருந்த ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.





