நடிகர் கமல்ஹாசன் கடந்த 2015ம் ஆண்டில் மதுரையில் மாநாடு நடத்திய மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கினார். நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவார் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், திடீரென கமல்ஹாசன் கட்சி துவங்கியது ஆச்சரியத்தை தந்தது.
எனினும் இது காலத்தின் கட்டாயம் என்று கூறிவிட்டு அரசியல் கட்சி தலைவரான நடிகர் கமல்ஹாசன் திமுக குறித்தும் அதிமுக குறித்தும் பாஜக குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக வாரிசு அரசியல் நடத்துவதாக டிவியை எல்லாம் உடைத்து ஸ்டாலினை விமர்சித்தார்.
ஆனால் மக்கள் நீதிமய்யம் போட்டியிட்ட சட்டசபை தேர்தல் நாடாளுமன்ற தேர்தல்களில் மிக மோசமான தோல்வியை கமல்ஹாசன் தழுவினார். அவரது கட்சிக்கு மக்கள் மத்தியில் சிறிதும் வரவேற்பும் ஆதரவும் இல்லாத நிலையில் ஒரு கட்டத்தில் கமல்ஹாசன் திமுகவின் ஆதரவாளராக மாறியது அவரது கட்சியினருக்கே பலத்த அதிர்ச்சியை தந்தது.
அதன்பிறகு அந்த கட்சியில் இருந்த பல முக்கிய நிர்வாகிகள் வெளியேறிய நிலையில் இப்போது திமுக ஆதரவுடன் கமல்ஹாசன் ராஜ்ய சபா எம்பியாக அரசியல் களத்தில் வலம் வருகிறார். இந்த சட்டசபை தேர்தலில் சில தொகுதிகளை ஒதுக்கிய திமுக உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும். டார்ச் லைட்டை உங்கள் கட்சி அலுவலகத்திலேயே பத்திரமாக வைத்துவிடுங்கள் என்று கறாராக கூறி விட்டனர்.
இதற்கு கமல் ஆரம்பத்தில் சம்மதித்த நிலையில், கட்சி நிர்வாகிகள் அதை ஏற்க மறுத்ததால் எங்களுக்கு தொகுதிகள் வேண்டாம். ஆனால் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு தருகிறோம் என்று கமல் பல்டியடித்து விட்டார். அதே நேரத்தில் இப்போது மற்றொரு விமர்சனத்திலும் கமல் சிக்கியிருக்கிறார். சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பமனு பெறப்பட்ட போது, ரூ. 50 ஆயிரம் அதற்காக டிபாசிட் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பணம் திருப்பி தரப்படவில்லை.
தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்றால் எதற்காக விருப்ப மனு பெற வேண்டும்? எங்களிடமிருந்து வசூலித்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று மக்கள் நீதி மய்ய கட்சியில் விருப்ப மனு அளித்த கட்சி நிர்வாகிகள் கொந்தளித்து போயுள்ளனர். ரஜினி அரசியலுக்கு வராமல் ஏமாற்றினார். கமல் அரசியலுக்கு வந்து ஏமாற்றுகிறார் என்று வேதனையாக தெரிவித்துள்ளனர்.





