தமிழ் சினிமாவில் அற்புதமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தினேஷ். இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படம் மூலம் அறிமுகமானார். அதனால் அட்டக்கத்தி தினேஷ் என்றுதான் அழைக்கப்படுகிறார். இப்போது லப்பர் பந்து படத்தில் கெத்து கேரக்டரில் நடித்த பிறகு கெத்து தினேஷ் என்று அழைக்கப்படுகிறார்.
அட்டக்கத்தி படம் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் விசாரணை படத்தில் நடித்தார். இந்த படத்தின் அபார வெற்றிக்கும், இந்த படம் முழுமையடைந்ததற்கும் தினேஷ்தான் காரணம். அவர் மட்டும் அத்தகைய கஷ்டமான காட்சிகளில் சிரத்தை எடுத்து நடிக்காவிட்டால் விசாரணை படம் சாத்தியமில்லை என்று வெற்றிமாறனே ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.
அந்தளவுக்கு நடிப்பில் சிறந்து விளங்கும் தினேஷ் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், ஒருநாள் கூத்து அண்ணனுக்கு ஜே திருடன் போலீஸ் கபாலி இரண்டாம் உலகப் போரின் கடைசிக்குண்டு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பண்ணையாரும் பத்மினியும் மெர்லின் போன்ற படங்களில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
இதில் கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பு தினேஷூக்கு அமைந்தது. அதே போல் திருடன் போலீஸ் படத்திலும் போலீஸ் கான்ஸ்டபிள் கேரக்டரில் தினேஷ் பாசக்கார மகனாக அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் அவரது நண்பராக பாலசரவணன் நடிப்பும் ரசிகர்களின் கவனம் பெற்றது.
அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் லப்பர் பந்து படத்தில் பூமாலை என்ற கேரக்டரில் பெயிண்டராக தினேஷ் நடித்திருந்தார். கெத்து என்ற அடைமொழியுடன் கிரிக்கெட் வீரராக அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, படமும் பெரிய வெற்றி பெற்றுள்ளது, அதனால் அட்டக்கத்தி தினேஷை இப்போது கெத்து தினேஷ் என்று அழைக்குமாறு அவரே கூறியிருக்கிறார்.
இந்நிலையில் கெத்து தினேஷ் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அட்டக்கத்தி பட இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் கெத்து தினேஷ் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் வில்லனாக ஆர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்துக்கு வேட்டுவம் என டைட்டில் வைக்கப்பட உள்ளது. டைட்டிலே மாஸ் ஆக உள்ளதே என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தங்கலான் பெரிய வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





