தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இந்த படத்தில் நரேன் நாயகனாக நடித்திருந்தார். பாவனா நாயகியாக நடித்திருந்தார். வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்த பிரபல பாடலாக டிரண்டிங் ஆனது.
அடுத்து அஞ்சாதே என்ற இளம்பெண்கள் கடத்தல் சம்பவத்தை மையப்படுத்தி மிஷ்கின் படம் இயக்கி இருந்தார். இதில் அஜ்மல், நரேன், பிரசன்னா, பாண்டியராஜன், பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கத்தாழ கண்ணால கொல்லாத பாடலும் மிக பிரபலமானது.
தொடர்ந்து ஓ நந்தலா, துப்பறிவாளன், சைக்கோ போன்ற படங்களை இயக்கிய மிஷ்கின் சவரக்கத்தி, மாவீரன், லியோ போன்ற படங்களிலும் நடிகராக தன்னை வெளிப்படுத்தி அசத்தினார். இப்போது விஜய் சேதுபதியை வைத்து டிரெயின் என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் வில்லனாகவும் நடிக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர தம்பதியர் விவாகரத்து சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. அன்று நளினி ராமராஜன், சீதா பார்த்திபன், கமல்ஹாசன் சரிகா போல இப்போது ஐஸ்வர்யா தனுஷ், சைந்தவி ஜிவி பிரகாஷ், ஆர்த்தி ஜெயம் ரவி என தம்பதியர் பிரிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைக்கிறது. அவர்கள் திடீரென கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்யும் இந்த சம்பவங்கள் ரசிகர்களை கவலையடைய வைக்கின்றன.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் மிஷ்கின் இதுபற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். மிஷ்கின் கூறியதாவது, ஒருமுறை நான் என் மனைவியிடம் விவாகரத்து கேட்டேன். என் மனைவி விவாகரத்து கொடுக்க முடியாது என்று சொல்லி ரொம்பவும் அழுதுட்டாங்க. அதில் இருந்து நான் விவாகரத்து கேட்கவில்லை. ஏனென்றால் அதில் இருக்கிற நியாயம் எனக்கு புரிந்தது. இப்பவும் நாங்கள் பிரிந்துதான் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம்.
ஆனால் எங்கள் மகள் எங்களுக்கு பாலமாக இருக்கிறாள். உன் அம்மாவை நீ எப்போதும் கைவிட்டு விடக் கூடாது என்று என் மகளிடம் சொல்லி இருக்கிறேன். நான் சினிமாவை கல்யாணம் செய்து விட்டேன். எனக்கு சினிமா போதும் என்று நினைக்கிறேன் என்று மிஷ்கின் தன் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசியிருப்பது இப்போது வைரலாகி வருகிறது.





