தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். தொடர்ந்து அஞ்சாதே துப்பறிவாளன் சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். படங்களை இயக்குவது மட்டுமின்றி தயாரிப்பது இசையமைப்பது போன்ற பணிகளையும் செய்கிறார்.
மேலும் லியோ மாவீரன் வணங்கான் டிராகன் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். வருகிற 21ம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான டிராகன் படம் ரிலீஸாகிறது. இந்த படத்தில் கல்லூரி பேராசிரியர் கேரக்டரில் இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார். மேலும் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் படமும் அடுத்து திரைக்கு வர உள்ளது.
சமீபத்தில் பட விழா ஒன்றில் பேசிய இயக்குனர் மிஷ்கின், மிக தாராளமாக சில கெட்ட வார்த்தைகளை திரும்ப திரும்ப பேசினார். இயக்குனர்கள் அமீர் வெற்றிமாறன் லிங்குசாமி பா ரஞ்சித் தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன் ஆகியோர் இருந்த அந்த மேடையில் அவர் கெட்ட வார்த்தைகளை பேசிய பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு நடிகர் அருள்தாஸ் கவிஞர் தாமரை தயாரிப்பாளர் எஸ் தாணு உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் மிஷ்கினை கண்டித்தனர். இதற்காக இயக்குனர் மிஷ்கின் பகிரங்கமாக மற்றொரு மேடையில் மன்னிப்பு கேட்டார். அதே நேரத்தில் இப்படி பேசியதற்காக ஒரு நண்பர் என் மீது செருப்பு எறிவதாக சொல்லி இருந்தார். அப்படி அவர் செருப்பை எறிந்தால் 8ம் நம்பர் செருப்புகளாக எறிய வேண்டும். என் கால் சைஸ் அதுதான் என்றும் நக்கலாக பேசியிருந்தார்.
இந்நிலையில் டிராகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, பேட் கேர்ள் படத்தை எடுத்தது ஒரு பெண். டிரெய்லரை பார்த்து அந்த படத்தை முடக்க நினைப்பது நியாயமில்லை. ஒரு பெண் கலங்குவது என் மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது. ஒரு பெண் இயக்குனர் ஆவது சாதாரண விஷயமில்லை. மிக முக்கியமானது என்று மிஷ்கின் பேசினார்.
பிறகு டிராகன் படத்தில் நடித்த கலைஞர்களின் புகைப்படங்களை காட்டி, ஒரு வரியில் கருத்து சொல்லுமாறு இயக்குனர் மிஷ்கினிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டுக்கொண்டார். அந்த வரிசையில் இயக்குனர் மிஷ்கினின் புகைப்படம் திரையில் தோன்றியது. அப்போது இயக்குனர் மிஷ்கின், விரைவில் சினிமாவை விட்டு விலகப் போகும் ஒருவன்’ என்று குறிப்பிட்டுச் சொன்னார். அவர் அப்படி சொன்னது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளது. இது உண்மையில் சொன்னாரா, அல்லது டிராகன் படத்துக்கான பிரமோசனா என்றும் ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.





