தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளவர் பா ரஞ்சித். அட்டக்கத்தி படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த அவர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை இயக்கினார். தொடர்ந்து கபாலி காலா சார்பட்டா பரம்பரை தங்கலான் என பல படங்களை இயக்கிய அவர் இப்போது வேட்டுவம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
ரஜினிகாந்த் ஆர்யா சியான் விக்ரம் கார்த்தி என முன்னணி நட்சத்திரங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித் இப்போது வேட்டுவம் படத்தை இயக்கி வருகிறார். கடந்தாண்டில் சியான் விக்ரம் நடித்த தங்கலான் படம் எதிர்பார்த்த வரவேற்பை வெற்றியை பெறவில்லை. எனினும் வேட்டுவம் படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது.
வேட்டுவம் படத்தில் அட்டக்கத்தி தினேஷ் சோபிதா துலிபாலா மற்றும் ஆர்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நாகைப்பட்டணத்தில் நடந்து வந்தது. கடந்த வாரத்தில் 13ம் தேதி வேட்டுவம் படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பு நாகையில் நடந்த போது, கார் சேஸிங் காட்சி படமாக்கப்பட்டது.
ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் தலைமையில் இந்த சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட போது, ஓடுகிற காரில் தாவி ஏறிய ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இது படக்குழுவினரை பலத்த அதிர்ச்சியில் தள்ளியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தி நடிகர் அக்ஷய்குமார் தனது சொந்த செலவில் 500 சண்டை கலைஞர்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து தந்ததாக கூறப்படுகிறது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் குடும்பத்துக்கு நடிகர் சிலம்பரசன் 1 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்ததாகவும் தகவல் வெளியானது.
வேட்டுவம் படப்பிடிப்பில் நடந்த இந்த விபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்ததால், கீழையூர் போலீசார் இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்ட 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கடந்த வாரத்தில் விளக்கம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித், படப்பிடிப்பு தளத்தில் இறந்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.





