பொதுவாக தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என நடிக்கும் நடிகர் நடிகைகள் முன்னணி நட்சத்திர ஹீரோக்களுடன் நடிப்பதை தங்களது வாழ்நாள் கனவாகவே வைத்திருப்பார்கள். இதில் ரஜினி கமல் விஜய் அஜீத் சிரஞ்சீவி அமிதாப் பச்சன் ஷாருக்கான் சல்மான்கான் சிவராஜ்குமார் மோகன்லால் மம்முட்டி போன்றவர்களுடன் நடிப்பதை பெரிய வாய்ப்பாக கருதுவார்கள்.
மற்ற மொழிகளை சேர்ந்த நடிகைகள் கூட நேர்காணலில் பேசும் போது ரஜினி கமல் அல்லது விஜய் அஜீத்குமார் என நட்சத்திர ஹீரோக்களுடன் ஒரு படத்தில் சில காட்சிகளில் மட்டுமாவது நடித்துவிட வேண்டும். அல்லது கேமியோ ரோலில் மட்டுமாவது ஒரு காட்சியில் வந்துவிட வேண்டும் என்பார்கள்.
பாலிவுட் நடிகர் அமீர்கான், கன்னட நடிகர் உபேந்திரா போன்றவர்கள் கூட அவர்களே பெரிய நட்சத்திர ஹீரோக்களாக இருந்தும் கூலி படத்தில் ரஜினியுடன் சில காட்சிகளில் மட்டுமே டம்மியாக வந்து போயிருந்தனர். இதுகுறித்து விமர்சித்த போது, ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்புக்காக அந்த படத்தில் நடித்தோம் என்று விளக்கம் தந்திருந்தனர்.
ஆனால் பிரபல மலையாள நடிகை ஒருவர் தெலுங்கில் மெகா ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் சிரஞ்சீவியுடன் நடிக்க மறுத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மலையாள நடிகை ஹனிரோஸ் பல படங்களில் மலையாளத்தில் நடித்துள்ளார். தமிழில் முதல் கனவே சிங்கம்புலி கந்தர்வன் ஆகிய படங்களில் ஹனிரோஸ் நடித்திருக்கிறார்.
தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி என்ற படத்தில் ஹனிரோஸ் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் ஹனிரோஸ் பிரபலமானார். இந்த நிலையில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் அடுத்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஹனிரோஸிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முதலில் நடிக்க ஒப்புக்கொண்ட ஹனிரோஸ் அதற்கான முன்பணத்தையும் பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் அந்த படத்தில் தனது கதாபாத்திரத்தின் தன்மையை காரணம் காட்டி தனக்கு அந்த கேரக்டரில் போதிய முக்கியத்துவம் இல்லை என்று கூறி அந்த படத்தில் நடிக்க ஹனிரோஸ் மறுத்துவிட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. கால்ஷீட் காரணமாக அவர் விலகியதாகவும் வாங்கிய அட்வான்ஸ் தொகையை அவர் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.





