ரெண்டு படத்துல நடிக்கிறாரு… ஒரு படத்துக்கு கூடவா அப்டேட் இல்ல… அஜித் பிறந்தநாளில் ரசிகர்கள் கடும் அதிருப்தி…
தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித். அவருக்கென தனி மார்க்கெட் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் உள்ளது. மற்ற நடிகர்களின் திரைப்படங்கள் ஒரு வாரம் பெரும் வசூலை, அஜித்தின் திரைப்படங்கள் இரண்டே நாட்களில் பெற்று விடும். அந்த அளவுக்கு பக்க பலமாக அவரது ரசிகர்கள் பெருமளவு இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியானது. விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் கலெக்ஷனில் கல்லா கட்டியது. வாரிசு திரைப்படத்தை விட, துணிவு திரைப்படம் அதிக வசூல் ஈட்டியது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில், விடாமுயற்சி படத்தில் நடிக்க அஜித் கமிட் ஆனார். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு மே ஒன்றாம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா அறிவித்தது. அதன் பின்பு, ஐந்து மாதங்கள் இடைவேளைக்கு பிறகு படத்தின் சூட்டிங் தொடங்கியது.
அஜர்பைஜான் நாட்டின் முழுக்க முழுக்க படப்பிடிப்பு நடைபெற, அது யார் படமோ என்ற தொனியில் எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்தது தயாரிப்பு நிறுவனம். படத்தில் அர்ஜுன், பிக் பாஸ் புகழ் ஆரவ், திரிஷா, ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பது அங்கு சூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் மூலம் தான் தெரியவந்தது. அதேபோல் படத்திற்கு அனிருத் இசையமைப்பதும் சமீபத்தில் தான் உறுதி செய்யப்பட்டது.
இப்படியான சூழலில் தனது அடுத்த திரைப்படத்திலும் அஜித் குமார் கமிட் ஆனார். இதற்கு குட் பேட் அக்லி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கிய, ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை எடுக்கிறார். இதற்கான சூட்டிங் வரும் பத்தாம் தேதி தொடங்குகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த நிலையில், அஜித்குமாரின் 53வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தீனா திரைப்படம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட, அதனை ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் பார்த்து வருகின்றனர். அவரது பிறந்தநாளில் எப்படியும் ஒரு படத்தின் அப்டேட் வரும் என காத்திருந்த சூழலில், அதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இரண்டு படங்களில் அவர் நடித்தும் இன்னுமா ஒரு அப்டேட் கூட விடுவதற்கு தயக்கமாக இருக்கிறது என்று ஆத்திரத்தில் அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





