தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவர் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இந்தியன் 2 படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் இப்போது மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அடுத்து கல்கி 2 படத்திலும் அன்பரிவ் இயக்கும் புதிய படம் ஒன்றிலும் கமல்ஹாசன் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்த பொதுக்கூட்டம் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக மீண்டும் கமல்ஹாசன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த பொதுக்குழுவில் நீட் தேர்வு ஒழிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு, தமிழகத்திற்கு உரிய நிதியை வழங்க மத்திய அரசை வலியுறுத்துதல் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பேச்சு ஆபத்தானது என்பது உலகுக்கே தெரியும். ஒரு தேர்தல் நடைபெற்றால் அங்கு ஒருவரது பெயர் மட்டுமே பெரிதாக உரைக்கப்படும். தற்போதைய ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல, இனி வருபவர்களுக்கும் எச்சரிக்கை. ஒரே நாடு ஒரே தேர்தல் என பார்த்த வடுக்கள் ரஷ்யா போன்ற நாடுகள் உள்ளன.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் இந்தியாவுக்கு தேவையில்லாத ஒன்று. இந்தியாவிலேயே நேர்மையானது தமிழகம்தான். நேர்மையானவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அதிக வரி கட்டுகிறோம். இந்த நாட்டை வழிநடத்திக் கொண்டிருப்பது நமது வரிப்பணம் தான். அதை பகிர்ந்து தர வேண்டும். மாநிலங்களுக்கான நிதி பகிர்வு நியாயமானதாக இருக்க வேண்டும்.
வீரமும் நேர்மையும் இருக்கிறதா என என்னையே கேட்டுக் கொண்டவன் நான். தோல்வி என்பது நிரந்தரம் அல்ல, அதேபோல் பிரதமர் பதவி என்பதும் நிரந்தரம் அல்ல. நான் நான்கு வயது முதல் மேடைகளை பார்த்து வருகிறேன். அதனால் அரசியலில் இருக்கிறேன். அன்றாட உடல் நலம் பேணுவது போல் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். இந்த பீடம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருக்க வேண்டும்.
நான் தோற்ற அரசியல்வாதிதான். தோற்ற அரசியல்வாதியையும் மக்கள் ஞாபகம் வைத்திருப்பார்கள். ஒரு தமிழன் பிரதமராக முடியுமா, அதற்கு நாம் தயாராக வேண்டும். நான் அரசியலுக்கு வந்தது நமக்கோ, எனக்கோ அல்ல. நாளைக்காக நான் விதை போடுவேன். வேறொருவர் சாப்பிடுவார். இவ்வாறு நடிகர் கமலஹாசன் பேசினார்.





