மக்கள் திலகம் புரட்சித் தலைவர் என்று ரசிகர்களால் தொண்டர்களால் கொண்டாடப்பட்ட எம்ஜிஆருக்கு அவரது படங்களில் வரும் பாடல்களே அவருக்கு பெரிய பெருமையை புகழை பெற்றுத் தந்தன என்றால் அது மிகையல்ல. அதுவும் அவரது கொள்கை பாடல்கள் என்று மக்கள் மத்தியில் எழுச்சி பாடல்களாக இருந்து கொண்டாடப்பட்டன.
அதனால் எம்ஜிஆர் தனது படங்களில் இடம்பெறும் பாடல்களில் மிகவும் கவனமாகவும் ஆர்வமாகவும் இருப்பார். நல்ல கொள்கை பாடல்களை எழுச்சியூட்டும் வரிகளுடன் மக்களுக்கு கொண்டு செல்ல திட்டமிடுவார். அதனால்தான் இன்றும் எம்ஜிஆர் பாடல்கள் உணர்வுபூர்வமாக தாளம் போட்டு ரசிக்க வைக்கின்றன.
எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்து இயக்கிய படம் நாடோடி மன்னன். அப்போது அந்த படத்திற்காகப் பாடல் பதிவு நடந்தபோது நடந்த சம்பவம் இது. தனது நாடடோடி மன்னன் படம் குறித்து கவியரசு கண்ணதாசனிடம் பேசிய எம்.ஜி.ஆர், என்னுடைய எல்லா சொத்தையும் விற்று இந்த படத்தை சொந்தமாக எடுக்கிறேன்.
இந்த படம் வெற்றி பெற்றால் நான் மன்னன். இல்லையென்றால் நாடோடி தான். ஆகையால் நாளைக்குக் காலை 9 மணிக்கு பாடல் எழுத வந்துவிடுங்கள் என்று கூறியிருக்கிறார். அதற்கு கண்ணதாசனும் சரியென்று சொல்லிவிட்டு கிளம்பி போயிருக்கிறார்.அடுத்த நாள் காலையில் 8 மணிக்கே கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், எம்.ஜி.ஆர் உட்படப் பலரும் வந்து விட்டனர்.
ஆனால் கவிஞர் கண்ணதாசன் மட்டும் பகல் 12.30 மணிக்கு அங்கு வந்திருக்கிறார். மன்னிச்சிடுங்க. கொஞ்சம் தாமதமாகி விட்டது என்று சொல்லியிருக்கிறார். நீங்க வர்ற வரைக்கும் எதுக்கு நேரத்தை வீணடிக்கணும் என்று கூறி பட்டுக்கோட்டையை ஒரு பாட்டு எழுதச் சொல்லியிருந்தேன் என்று சொல்லி ஒரு காகிதத்தை கண்ணதாசன் கையில் கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
அந்தக் காகிதத்தில், போர்ப்படையில் தூங்கியவன் வெற்றி இழந்தான். உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான். இன்னும் பொறுப்புள்ள மனிதனின் தூக்கத்தினால் பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா என்று பாடல் வரிகள் எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்த கண்ணதாசன், நான் தாமதமாக வந்ததற்கு என்னை நாலு அடி சாத்தியிருக்கலாம். ஆனால் இப்படிப் பண்ணிட்டீங்களே. இனிமே என் வாழ்க்கையில் தாமதமாகவே வரமாட்டேன் என்று எம்ஜிஆரிடம் வருத்தமாக சொல்லியிருக்கிறார்.





