ஜெயிலர் படம் தந்த மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடித்து முடித்த படம் வேட்டையன். இந்த படம் வருகிற 10-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வந்தார். இந்த படத்தில் நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் நடிக்கின்றனர்.
நடிகர் ரஜினிகாந்துக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு 4 தினங்களுக்கு முன்பு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சிகிச்சை நடந்து முடிந்த நிலையில் இன்று காலை ரஜினிகாந்த் வீடு திரும்பியுள்ளார். அவர் இன்னும் சில வாரங்கள் அல்லது சில மாதங்களுக்கு வீட்டில் ஓய்வில் இருப்பார் என்று கூறப்படுகிறது.
அதன்பிறகு தான் அவர் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. ஏனெனில் மருத்துவர்கள் உடலை அதிகளவில் சிரமப்படுத்தும் விதமான சண்டைக் காட்சிகளிலோ, நடனக் காட்சிகளை இப்போதைக்கு நடிக்க வேண்டாம் என்று ரஜினிக்கு அறிவுறுத்தியுள்ளனர். அதனால் சில மாதங்கள் அவர் ஓய்வு எடுக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது கூலி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், வரும் மார்ச் மாதத்துக்குள் கூலி படத்தை முடித்துவிட்டு, ஏப்ரல் மாதம் 10ம் தேதி கைதி 2 படப்பிடிப்பை துவங்க ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருந்தார். ஆனால் இப்போது ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது என்ற சூழல் ஏற்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நாட்களுக்குள் இந்த படத்தை முடிக்க முடியுமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆனால் ஆரம்பத்திலேயே ரஜினிகாந்தின் முதுமை மற்றும் உடல் நலம் குறித்து யோசித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், படப்பிடிப்பை ஷெட்யூல் செய்திருக்கிறார். அதாவது கூலிபடப்பிடிப்பு தொடர்ந்து நடந்துக் கொண்டேதான் இருக்கும். இடையிடையே ஓரிரு நாட்கள் மட்டும் ரஜினிகாந்த் வந்து நடித்தால் போதும்.
மற்றபடி அவர் ஓய்வில் இருப்பதில் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் படப்பிடிப்பை நடத்திக் கொள்ள யோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். ரஜினி நடிக்கும் காட்சிகள் குறைவாகதான் இருக்கும். அதனால் கூலி படப்பிடிப்புக்கு எந்த தடையும் ஏற்படாது. குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அந்த படத்தை முடித்து விடுவார் என்று பக்கா பிளான் போட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜை பலரும் பாராட்டி வருகின்றனர்.





