தமிழ் சினிமாவில் மிகக்குறைந்த திரைப்படங்களை கொடுத்து தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கியவர் இயக்குனர் லோகேஷ். மாநகரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என ஐந்தே ஐந்து திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து கூலி என்னும் படத்தை அவர் எடுக்க இருக்கிறார். இதற்கான பிரீ ப்ரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தங்கக் கடத்தலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. இதில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இந்த அளவு உச்சத்தை தொட்டதற்கு காரணம், அவரது எல் சி யு கான்செப்ட் தான். அவரது இயக்கத்தில் இரண்டாவது திரைப்படமாக வெளியான கைதி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஒரே இரவில் நடைபெறும் கதையாக அதனை லோகேஷ் இயக்கி இருந்தார்.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு அவர் தனது ஆதர்சன நாயகனான உலக நாயகனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். இதில் தான் எல் சி யு என்னும் கான்செப்ட்டை கொண்டு வந்தார். அதாவது கைதி திரைப்படத்தில், இருந்த கதாபாத்திரங்களையும், அதில் வைத்திருந்த போதை பொருள் கடத்தும் சம்பவங்களையும் விக்ரம் படத்தோடு தொடர்பு படுத்தி இருந்தார் லோகேஷ்.
இந்த டெக்னிக்கை ஏற்கனவே பல இயக்குனர்கள் அறிமுகப்படுத்தி இருந்தாலும், லோகேஷ் கையாண்ட விதம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. குறிப்பாக, கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி என அனைவரும் ஒரே கதைக்குள் நுழைந்தது பலருக்கும் பிடித்துப் போனது. லியோ திரைப்படத்தையும் எல்சியுவில் திணித்திருந்த லோகேஷ் கனகராஜ், தற்போது எல் சி யு எங்கே ஆரம்பித்தது என்பதை விளக்குவதற்கான குறும்படத்தை இயக்கியிருக்கிறார்.
இதற்குப் பிள்ளையார் சுழி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தில், விக்ரமின் கமல்ஹாசனுக்கு மகனாக நடித்த காளிதாஸ், கைதியில் போலீஸ் அதிகாரியாக வரும் நரேன், போதைப் பொருள் கடத்தும் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோ நடித்து இருக்கிறார்கள். வெறும் இருபதே நாட்களில் இதன் படபிடிப்பை லோகேஷ் முடித்திருக்கிறார். இந்த குறும்படம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு வரும் திங்கட்கிழமை வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.





